வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும், பிரியா இராமச்சந்திரன், வானதி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ.

பல ஆண்டுகளாகத் தொடரும் நீதிமன்ற வழக்கு போல, சில கம்பராமாயண விவாதங்கள் தலைமுறைகளைக் கடந்து நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட வாலி வதை விவாதத்துக்கு, இந்நுால் வழி புதிய பங்களிப்பு செய்திருப்பவர், மருத்துவர் பிரியா இராமச்சந்திரன்.

ஆதிகவி வால்மீகியும், தமிழ்க்கவி கம்பனும் நல்கிய படைப்புகளில், வாலி வதையால் இராமன் முதற்கொண்டு பல்வேறு கதை மாந்தர்களும், தம் இயல்பில் அடையும் மாற்றங்களை நுாலில் நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார்.

கிட்கிந்தா காண்டத்தில் வரும் விஷயங்களில் வால்மீகியும், கம்பரும் ஒன்றுபடுவதையும் வேறுபடுவதையும் நுாலில் காட்டியிருப்பது நன்று. இருவரும் காட்டும் கதை மாந்தர்களின் வெவ்வேறு மனநிலைகள் சுவைபட முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆதிகவியின் சுக்ரீவன், வாலியை நினைத்த மாத்திரத்திலேயே அஞ்சுவதும், நயவஞ்சகமும், இராமனின் வலிமையின் மீது ஐயமும், துாற்றுதலும் எனப் பல இயல்புகளாக இருக்க, கம்பனின் சுக்ரீவனுக்கு வாலியிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் நோக்கமே பிரதானமாக இருப்பதாக வெளிப்பாடாகிறது.
ஆதிகவியின் வாலி வதையில் உள்ள ஆறு முடிச்சுகளைக் காட்டி, கம்பகவி ஒவ்வொன்றையும் அவிழ்த்து தெளிவு தருவதை காட்டியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது.

கனமான வாலி வதையை முடிச்சுகளும், முடிச்சுகள் அவிழ்வதுமாக இரு பகுதிகளாக்கி ஒப்பீடுகள் செய்து, எளிய வாசிப்புக்கு ஏற்ப நுாலை சுவைபட உருவாக்கியிருக்கும் இந்த உத்தி பாராட்டுக்குரியது.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

– மெய்ஞானி பிரபாகரபாபு

நன்றி: தினமலர், 15/4/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *