வெண்ணிற இரவுகள்
வெண்ணிற இரவுகள் ,சிறுகதைகளும் குறுநாவல்களும் , ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி; தமிழில் – ரா. கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 394, விலை ரூ. 350.
உலகின் தலைசிறந்த பத்து நாவலாசிரியர்கள் என எவரொருவர் பட்டியலிட்டாலும் அவர்களில் ஒருவராக இடம்பெறுபவர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி.
“குற்றமும் தண்டனையும்’, “அசடன்’, “கரமசோவ் சகோதரர்கள்’ போன்ற பெருநாவல்களை எழுதிய ரஷிய எழுத்தாளர். நாவலைப் பற்றிப் பேசினாலே குற்றமும் தண்டனையையும் விட்டுவிட்டுப் பேச முடியாது.<br>
இத்தனை பெருமைமிக்க தஸ்தயேவ்ஸ்கியால் 1848-இல் – இன்றைக்கு 172 ஆண்டுகளுக்கு முன் – எழுதப்பட்ட குறுநாவல் “வெண்ணிற இரவுகள்’. மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் இந்த குறுநாவல், இவ்வளவு காலத்துக்குப் பிறகும் படிக்க அதே உயிர்த்துடிப்புடன் திகழ்கிறது.
இந்தத் தொகுப்பில் வெண்ணிற இரவுகள், பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், அடக்கமான பெண், அப்பாவியின் கனவு ஆகிய குறுநாவல்கள், சிறுகதைகள், புனைகதைகள் இடம் பெற்றுள்ளன.<br>
வெண்ணிற இரவுகளில், “முதல் நாள் இருந்த இடத்திலிருந்து எந்த நாற்காலியாவது மாற்றப்பட்டுவிட்டதாகத் தெரிந்தால் போதும், நான் அமைதியிழந்து விடுகிறவன்’ என்ற ஒற்றை வரியே நாயகனைப் பற்றிய அறிமுகத்துக்குப் போதுமானது.
இரவுகளின் அடுத்தடுத்த சந்திப்புகளில் நாஸ்தென்காவுக்கும் நாயகனுக்குமான (அல்லது தஸ்தயேவ்ஸ்கியுக்குமான) உரையாடல்கள் அற்புதமானவை.
“அருவருப்பான விவகாரம்’ இவான் இலியீச்சின் நினைவுகளில் ஓடும் வரியொன்றில், “நமது உணர்ச்சிகளில் பலவும் சாதாரண மொழியில் பெயர்க்கப்பட்டதும் சிறிதும் நம்ப முடியாதனவாகத் தோன்றுகின்றன’ என்கிறார்; இன்றைக்கும் எத்தனை பொருத்தம்?
அடக்கமான பெண் – புனைகதை – எழுதப்பட்டுள்ள பாணியெல்லாம் நினைத்தும் பார்க்க முடியாதது. இன்றைய நவீன எழுத்துகளையே திணறஅடிக்கக் கூடியது.
மாஸ்கோவிலிருந்து வந்தடைந்த எண்ணற்ற ரஷிய இலக்கிய மொழிபெயர்ப்புகளின் பிரதிகள் இப்போது கிடைப்பதில்லை. அவ்வப்போது இதுபோன்ற சில மறுபதிப்புகள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
நன்றி: தினமணி, 4/10/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818