வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள்,  ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், பக்.688, விலை ரூ.450.

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ என்று சுட்டுகிறது தொல்காப்பியம். ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்து தோன்றும்போது, ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல் பிறக்க இடமுண்டாகிறது. கருத்து வேறுபடும்போது சொல்லும் வேறுபட வேண்டும். இல்லையெனில் பொருள் மயக்கம் உண்டாகும். மொழியும் வளர்ச்சியுறாது. இதுவே சொல்லாக்க நெறிமுறை.

இந்த நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் வேர்ச்சொல் ஆய்வில் மூழ்கிக் கிடந்த ஞா.தேவநேயப் பாவாணர் ‘செந்தமிழ்ச் செல்வி‘ என்னும் திங்களிதழில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.

இதிலுள்ள ஆய்வுக் கட்டுரைகள் நான்கு தொகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. 54 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு எழுத்திலும் தொடங்கும் முக்கிய சொற்கள் மற்றும் அதே ஒலிக்குறிப்புடைய பிற சொற்கள், அவற்றுக்கான பொருள் விளக்கம், அச்சொற்கள் புராணங்களிலும், இலக்கியங்களிலும், மக்கள் வழக்கிலும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிற விளக்கம் – இவையெல்லாம் விரிவாகவும், சுவையாகவும் கூறப்பட்டுள்ளன.

குறிப்பாக, சில சொற்களுக்கு கந்தபுராணம், பெரியபுராணம் போன்ற புராணங்களிலிருந்தும், கலித்தொகை, சீவக சிந்தாமணி, பட்டினப்பாலை போன்ற இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்களைப் பயன்படுத்தியிருக்கும் நூலாசிரியரின் ‘நுண்மாண் நுழைபுலம்‘ நம்மை வியக்க வைக்கிறது.

அடிக்கடி புரட்டிப் பார்க்க வேண்டிய இதுபோன்ற நூல்களுக்கு பொருளடக்கம் இன்றியமையாதது. அது ஏனோ இந்நூலில் இடம் பெறவில்லை. ஒவ்வொரு தமிழரும் அவசியம் வைத்திருக்க வேண்டிய நூல்.

நன்றி: தினமணி, 20/8/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published.