வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை)

வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை) , சீ.சுந்தரம், வித்யுத் பதிப்பகம்,  பக்.584, விலை  ரூ.500.

ஆண்டாளும் கிருஷ்ணனும் என்பதுதான் “வேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும்’ என்று நூலின் தலைப்பாகியிருக்கிறது. திருப்பாவைக்கு விளக்கவுரை இந்நூல் என்று கூறுவதைவிட, மிக அற்புதமான தத்துவக் கருத்துகளை விளக்கும் அரிய ஆராய்ச்சி நூல் என்றே கூறலாம்.

ருப்பாவைக்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை எழுதிய உரை, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய ஆறாயிரப்படி வியாக்கியானம், திருநாராயணபுரத்து ஆய் என்றழைக்கப்படும் தேவராஜர் வழங்கியுள்ள ஈராயிரப்படி மற்றும் நாலாயிரப்படி எனப் பல உரைகளும், வியாக்கியானங்களும், தனியன்களும், ஆழ்வார் பலருடைய பாசுரங்களும் இந்நூலில் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளன.

மேலும், பல சங்க இலக்கியங்களிலிருந்தும், பக்தி இலக்கியங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் மேற்கோள் காட்டி விளக்கியிருப்பது அருமையிலும் அருமை.

ஆண்டாள் காலம், திருப்பாவை வியாக்கியானங்கள், திருப்பாவையின் பாசுரப்பகுப்பு, பாசுர அமைப்பு முறை, உள்ளுறைப் பொருள், பாவை நோன்பு, திருப்பாவை ஆய்வுகள், நப்பின்னை என்பவள் யார்? சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலிய தமிழ்க் காப்பியங்களில் இடம்பெறும் நப்பின்னை குறித்த பாடல்கள், சுகப்பிரம்மம் என்ற முனிவர் ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையைப் பற்றிக் குறிப்பிடாமைக்குக் காரணம் என்ன?, திருப்பாவையில் ஆழ்வார்களை எழுப்புதலின் விளக்கம், ஜீயர் ஸ்வாமியின் குறிப்புகள் என வைணவம் தொடர்பான பல அற்புதமான தகவல்களையும் தத்துவங்களையும் எடுத்துக் கூறுகிறது.

பக்கத்துக்குப் பக்கம் நூலாசிரியரின் உழைப்பு (மேற்கோள் பாடல்கள்) மிளிர்கிறது. வைணவர்களுக்கும் வைணவ இலக்கியத்திற்கும் கிடைத்த புதியதொரு நன்முத்து இந்நூல்.

நன்றி: தினமணி, 17/7/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *