வீழ்வேன் என்று நினைத்தாயோ?

வீழ்வேன் என்று நினைத்தாயோ?, மாலன், கவிதா பதிப்பகம், விலை 100ரூ.

சிங்கப்பூர் குடிசைகள் எப்படி அடுக்குமாடி வீடுகள் ஆயின?

சிங்கப்பூரை லீ குவான் யூ கட்டியமைத்த கதையை 128 பக்கங்களில் ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ?’ என்ற நூலில் சுருக்கமாக எழுதியிருக்கிறார் மூத்தப் பத்திரிகையாளரான மாலன். குடிசைகளில் இருந்த பெரும்பான்மை சிங்கப்பூர்வாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள் எப்படி சொந்தமாயின எனும் அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதி இது.

‘‘லீ குவான் யூவின் கனவுதான் என்ன?

ஒரு தேசம் உறுதியாக நிற்க வேண்டுமானால் அதில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக நிற்கும் வலிமை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் உறுதியாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். இது லீயின் சிந்தனைகளில் ஒன்று. சிந்தனை சரிதான். ஆனால் நடைமுறையில் சாத்தியமா?

நடைமுறை சாத்தியமில்லை என்றுதான் மற்ற நாடுகள் நினைத்திருக்கும். ஆனால், ஏன் சாத்தியமாக்கக் கூடாது என்று லீ நினைத்தார். சிங்கப்பூரின் வெற்றி மந்திரங்களில் ஒன்று இந்த ‘ஏன் கூடாது?’ ஏன் என்ற கேள்வி சில நேரங்களில் சோர்வளிக்கும். ஏன் கூடாது என்ற கேள்வி ஊக்கமளிக்கும் என்பது உளவியல்.

ஒவ்வொரு நாடும் வீட்டுப் பிரச்சினையை ஒவ்வொரு விதத்தில் அணுகிவந்திருக்கின்றன. சோஷலிச நாடுகள், நாடு ஒட்டுமொத்தமாகப் பொருளாதார வளர்ச்சி காணும்போது வீட்டுப் பிரச்சினை தானாகத் தீரும் எனக் கருதின. முதலாண்மை நாடுகள் தனிமனிதனின் பொருளாதாரம் மேம்படும்போது அவரவர்களே வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வார்கள் என்று கருதின. நடைமுறைவாதியான லீ, வீடுகளைக் கட்டுவது மூலம் நாட்டைக் கட்ட முடியும் என நம்பினார். அரசியலுக்கு வருவதற்கு முன்பிருந்தே அவரது சிந்தனை ‘வீட்டுடமைச் சமூகம்தான்’.

குடியரசாக மலர்வதற்கு முன்பு, சுய ஆட்சி அரசு (பிரிட்டீஷ் அரசின் கட்டுப்பாட்டின்கீழ், குடிமைப் பணிகளை நிறைவேற்றிக்கொள்ளும் அதிகாரம் கொண்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு) உருவான காலத்திலேயே அதற்கான வேலைகளைத் தொடங்கினார் லீ. சுய ஆட்சி அரசுக்கான 1959-ல் நடந்த தேர்தலில் லீயின் கட்சி பிரம்மாண்ட வெற்றி பெற்றிருந்தது (மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்கள்) லீ பிரதமானார். அப்போது, 1960-ல் அவரது அரசு வீட்டு வசதிக் கழகத்தை (வீ.வ.க.) உருவாக்கியது தெளிவான இலக்கு, எளிதான நடைமுறை என்ற இரு அம்சங்கள் அதன் ஆணி வேர்.

ஆண்டுக்கு 10 ஆயிரம் வீடுகள் என்ற அடிப்படையில் 10 ஆண்டுகளில் லட்சம் வீடுகளை அரசு கட்டும். அவை தவிர ஆண்டுக்கு 2,500 வீடுகள் கட்டும் பொறுப்பு தனியார் துறைக்கு வழங்கப்படும். இது இலக்கு. வீடு கட்டுவதற்கான நிலத்தைக் கையகப்படுத்துவது, அனுமதி அளிப்பது, கட்டப்பட்ட வீடுகளை ஒதுக்கீடு செய்வது என அமைக்கப்பட்ட 35 கமிட்டிகளைக் கலைத்துவிட்டு ஒரே அமைப்பின்கீழ் அவற்றைக் கையாள்வது. இது எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறை.

திட்டம் காகிதத்தில் பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால், ஆண்டுக்குப் பத்தாயிரம் வீதம் பத்தாண்டில் லட்சம் வீடுகள் கட்டுவது என்றால் நிலத்திற்கு எங்கே போவது? ‘டைமண்ட்’ வடிவத்தில் உள்ள சிங்கப்பூரில் மிக விலகிய இரு இடங்களுக்கிடையே தூரம் 52 கி.மீ.தான். நிலமில்லாவிட்டால் என்ன? வானம் இருக்கிறதே! அகலமாக வளர்வதற்குப் பதிலாக உயரமாக வளரலாம் என முடிவெடுக்கப்பட்டது. 12 மாடி, 16 மாடி என அடுக்குமாடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டது.

பிரமிக்கத்தக்க விதத்தில் வீ.வ.க. செயல்பட்டது. உருவாக்கப்பட்ட இரண்டாண்டுகளில் 26,168 வீடுகளை அது கட்டி முடித்தது. வீ.வ.க. உருவாவதற்கு முன் வீடுகள் கட்ட ‘சிங்கப்பூர் வளர்ச்சி அறக்கட்டளை’ (சி.வ.அ.) என்ற அரசு ஆதரவு பெற்ற நிறுவனம் ஒன்றிருந்தது. 32 ஆண்டுகளில் சி.வ.அ. கட்டிய வீடுகளின் எண்ணிக்கையை வீ.வ.க. இரண்டாண்டுகளில் கட்டி முடித்தது! ஐந்தாண்டுகளில், அதாவது சிங்கப்பூர் குடியரசாக மலர்ந்த 1965-ல், அதன் இலக்கான 50 ஆயிரம் வீடுகள் என்பதைத் தாண்டி, 53 ஆயிரம் வீடுகளைக் கட்டி முடித்திருந்தது. 1965 உலக அளவில், சோவியத் யூனியன், ஜெர்மனிக்கு அடுத்தபடியாக வீட்டு வசதி விஷயத்தில் முன்னணியில் நின்றது சிங்கப்பூர். அமெரிக்காவைவிடவும் மேலான நிலையில். பிரான்ஸ், நெதர்லாந்து, மற்ற ஐரோப்பிய நாடுகளைவிடவும் சிறப்பான நிலையில் அது இருந்தது.

அரசு கை பணத்தைப் போட்டோ, கடன் வாங்கியோ, மூலதனம் திரட்டியோ ஆயிரக் கணக்கில் வீடுகளைக் கட்டிவிடலாம். ஆனால், அவற்றை இலவசமாகக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் மக்களுக்கு அதன் அருமை புரியாது என்பது மட்டுமல்ல, தொடர்ந்து அரசால் வீடுகள் கட்ட முடியாது. பொருளாதாரம் முடங்கி ஒரு இடத்தில் மொத்த திட்டமும் தடைப்பட்டு முடங்கி நிற்கும். ஆண்டுக்குப் பத்தாயிரம் வீடுகள் என்ற இலக்கை அடைய முடியாது. இதற்குத் தீர்வு, கட்டப்பட்ட வீடுகளை விற்பதுதான். விற்கலாம்தான். ஆனால் யார் வாங்குவார்கள்? குடிசைகளில் வாழுகிற மக்களிடம் வாங்கும் சக்தியிருக்குமா?

அங்குதான் ஒரு புரட்சிகரமான அணுகுமுறையை அரசு மேற்கொண்டது. அதுதான் மற்ற பல நாடுகளில் வெற்றி காணாத வீட்டு வசதித் திட்டம், சிங்கப்பூரில் வெற்றி கண்டதற்குக் காரணம். அது- வீடுகளுக்குக் குடிபெயர்வோர், வீட்டின் விலையில் 20% முதல் தவணையாகக் கொடுக்க வேண்டும். மீதமுள்ள தொகையை வீ.வ.க. மிகக் குறைந்த வட்டியில் கடனாகக் கொடுக்கும். அந்தக் கடனுக்கு மாதா மாதம் தவணை கட்டி வர வேண்டும், வாடகை செலுத்துவதைப் போல.

சரி கையில் ரொக்கம் இருந்தால்தானே கொடுக்க முடியும்? கையிலிருந்து கொடுக்க வேண்டாம். சேமிப்பாக இருக்கும் வருங்கால வைப்புத் தொகையிலிருந்து அந்த 20 சதவீதத்தை எடுத்துக்கொள்ளச் சொல்லலாம். மாதத்தவணையைக்கூட அதில் பிடித்துக்கொள்ளச் சொல்லலாம். இதற்கு வகை செய்யும் விதமாக பிராவிடண்ட் பண்ட் சட்டம் 1968-ல் திருத்தப்பட்டது. விளைவு, 1970-ல் நாற்பதாயிரம் குடும்பங்கள் சொந்த வீடு வாங்கியிருந்தன!’’

-மாலன்

நன்றி: தி இந்து,20/10/18.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027268.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *