விண்ணும் மண்ணும்
விண்ணும் மண்ணும், மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு, முரண்களரி படைப்பகம், பக்.128, விலை ரூ.150.
இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையும், ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபுவும் எழுதிய கட்டுரைகள் மற்றும் மயில்சாமி அண்ணாதுரையின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பு இந்நூல்.
உலகில் பல நாடுகள் நிலா குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தபோதிலும், நிலாவில் தண்ணீர் உள்ளது என்பதைக் கண்டறிந்து சாதனை படைத்தது சந்திரயான் -1. அது கண்டறிந்ததை உறுதிப்படுத்த மேற்கொண்ட அடுத்த பயணம்தான் சந்திரயான் -2. அதன் பயணத்தின் இறுதியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. இவற்றை “இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ குறித்த மயில்சாமி அண்ணாதுரை எழுதிய கட்டுரைகள் விளக்குகின்றன.
அவர் பிறந்து வளர்ந்த கோதவாடி கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட நீர் வற்றியிருந்த ஆற்றில் 1500 அடிக்கும் கீழே தோண்டி தண்ணீர் எடுத்ததை, நிலவில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்துக் கொடுத்த சந்திரயான் ஆய்வு நிகழ்வோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பது அருமை. ஈரோடு பாரதி விழாவில் பாரதி குறித்து அவர் வாசித்த கட்டுரை பாரதி பற்றிய புதிய பார்வையை ஏற்படுத்துகிறது. எவற்றில் எல்லாம் அச்சம் தவிர்க்க வேண்டும் என்பதை விளக்கும் கட்டுரை, அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கட்டுரை குறிப்பிடத்தக்கவை.
ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய கட்டுரைகள் அறிவியல் வளர்ச்சிகளை விவரிப்பதாக உள்ளன. வானில் நாம் அனுப்பிய செயற்கைக் கோள்களைப் பாதுகாக்க ஏவப்படும் மிஷன் சக்தி குறித்த கட்டுரை, முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம் வருங்காலத்தில் அறிவியலின் எல்லாத்தளங்களிலும் பெறப்போகும் வளர்ச்சியைக் கூறும் “துடிக்கிறது அச்சடிக்கப்பட்ட இதயம்’ கட்டுரை, மின்சாரம் வீணாவதைத் தடுக்கும் மிகை மின்கடத்தல் தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை என அனைத்துக் கட்டுரைகளும் அறிவியலின் இன்றைய வளர்ச்சியை நமக்கு எடுத்துக்காட்டுபவையாக உள்ளன. அறிவியல் விழிப்புணர்வை இந்நூல் ஏற்படுத்துகிறது.
நன்றி: தினமணி, 16/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031545_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818