யுகாந்தா
யுகாந்தா, மராத்தி மூலம் ஜராவதி கார்வே, தமிழில் அழகிய சிங்கர், ஓரியன் பதிப்பகம்.
இவர்களைப்போல் பெண்கள் வாழக்கூடாது!
ஜராவதி கார்வே, மராத்தியில் எழுதி ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பாகி உள்ள, ‘யுகாந்தா’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற அந்த நூலை, தமிழில் நானும் மொழி பெயர்த்துள்ளேன். ஓரியன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.
மகாபாரதம், ராமாயணம் இரண்டும் இந்தியர்களின் மாபெரும் காப்பியங்கள். இந்த இரண்டிலும் வரும், பெண் கதாபாத்திரங்களைப் பற்றியதுதான், ‘யுகாந்தா’. இரு காப்பியங்களில் வரும் பெண்களின் நிலை, அவர்களின் எண்ணங்கள், செயல் ஆகியவற்றை தனித்தனியாக விவரிக்கிறது.
இந்திய சமூக சூழலில் பெண்களின் நிலை எப்படி இருந்தது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. தற்போது அதுபோன்ற சூழல் மாறி இருந்தாலும், பெண்களின் நிலை எப்படி இருக்கக்கூடாது என்பதை, இரு காப்பியங்களில் வரும் பெண் பாத்திரங்கள் எடுத்துரைக்கின்றன என்கிறார், நூலாசிரியர்.
மகாபாரதத்தின் நாயகி திரவுபதி, ராமாயணத்தின் நாயகி சீதை. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் யாகத்தின் மூலம் பெற்ற குழந்தைகள். இருவரும் வனவாசம் சென்றவர்கள். இருவரும் கணவரின் சந்தேகத்துக்கு உட்பட்டவர்கள். ஆனால், அவர்கள் மனதில்இருந்தது என்ன, அவர்களால் அவற்றை செயல்படுத்த முடிந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே பதிலாக கிடைக்கிறது.
ஆண்களின் மனோபாவத்தாலும், செயல்பட்டாலும் இரு பெண்களும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் விரும்பியது வேறு ஒன்றாக இருந்தாலும், ஆண்களுக்கு அடிமைப்பட்டு அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. சீதை மீது ராமன் சந்தேகப்படுவான். திரவுபதி அவள் விரும்பியவரோடு மட்டும் வாழாமல் ஐவருக்கும் மனைவியாக இருப்பாள்.
‘ஐவருக்கும் மனைவியாக இரு’ என, குந்தி சொன்னாலும், தான் செய்தது தவறு என, பின்னாளில் அவள் வருந்துவாள். இவ்விரு காப்பியங்களிலும் வரும் பெண் கதாபாத்திரங்களின் நிலையை, நூலாசிரியர் விவரிக்கும்போது, இவர்களைப்போல் பெண்கள் வாழக்கூடாது என்பதை உணர்த்துவதாகவே இருக்கிறது.
இந்தப் படிப்பினையை இக்கால பெண்கள் உணரும் வகையில், நூலாசிரியர் பல்வேறு ஒப்பீடுகளையும், காரணங்களையும் எடுத்துரைப்பது மிகச் சிறப்பு.
நன்றி: தினமலர், 27/3/2016.