இராமன் கதை

இராமன் கதை, முனைவர் ச.லோகாம்பாள், அருள் பதிப்பகம், பக். 576, விலை 430ரூ.

ராமாயணத்தை பல கோணங்களிலும் நுணுக்கமாக ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றையும், கதைப் போக்குடன் தம் ஆய்வுக் கருத்துகளை நிறுவுகிறார் நூலாசிரியர். ராமபிரானின் குணநலன்களை அடுக்கிக் கூறும் நுலாசிரியர், ராமன் மாபெரும் மன்னன் என்ற இறுமாப்பின் உருவகமாகவே காட்சியளிக்கிறான் என்றும், கோபத்தால் பொறுமை இழந்து அரக்கர் முதலானோரைக் கொன்று குவித்த கொடியவன் ராமன் என்று கூறும் கருத்துகள், இந்த நூலை படிப்போருக்கு நெருடலாகவே இருக்கும். தசரதன், ராமனுக்கு மட்டும் செல்வத்தை கொடுக்க முடிவு செய்து வஞ்சனை செய்தான். தவறு செய்தான். ஆனால் நல்லவளாகிய கைகேயி அதை ராமன் முதலிய நால்வரும் பெறுவதற்கு உதவினாள். ஒருவருக்கு (ராமனுக்கு) சாதகம் செய்வதன் மூலம், மற்ற மூவருக்கும் உண்டாக இருந்த பாதகத்தை போக்கவே, கைகேயி மனம் மாறி உறுதி பூண்டாள். முடிபுனைந்து ஏற்க இருந்த அரசு சுமையை, ராமனுடைய தோள்களில் இருந்து இறக்கி அவனுக்கு உதவினாள். இவ்வாறெல்லாம் கைகேயியை உயர்ந்தவளாக படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர். கோசலையுடனும், கைகேயியுடனும் ஒற்றுமையாக வாழ்ந்தமையால், சுமித்திரை அண்டிப் பிழைக்கும் குணம் உடையவள் என்பதும், கைகேயி மீது காழ்ப்பு கொண்டு, அவளோடு பழகுவதைத் தவிர்த்தாள் கோசலை என்பதும், இந்த நூலின் ஆராய்ச்சிக் கருத்துகள். மேற்கோள்களாக அமையும் திருக்குறள் பாகக்ளை குறள் வெண்பா வடிவிலேயே அச்சிடாமல், கண்டபடி அச்சிட்டுள்ள முறையை தவிர்த்திருக்கலாம்.குறட்பாவில் உள்ளினேன் என்பதை உன்னினேன் என பிழையாக அச்சிட்டுள்ளதை (பக். 269), அடுத்த பதிப்பில் சரி செய்யலாம். ராமாயண கதையையும் கருத்துகளையும் அறிந்துகொள்ள உதவும் ஆய்வு நூல். “மனிதன் என்பவன், சுயமாக சிந்தித்து செயலாற்றும் திறமை உடையவன். சிறியபோது, அவ்வாறற்லை தடை செய்யும் இயல்பு, மதுவுக்கு உண்டு. அயோத்தியர் சூழலில், இந்த பழக்கம் இருப்பதாக கம்பர் கூறவில்லை. கிட்கிந்தையர், தாம் மகிழ்ந்தபோது மது அருந்தினர். களியாட்டமும் செய்தனர். அது எந்த மது என்பதை கம்பர் தெளிவுபடுத்தியுள்ளார். (பக். 2).” -பேரா. ம. நா. சந்தான கிருஷ்ணன். நன்றி: தினமலர், 23/11/2014.

Leave a Reply

Your email address will not be published.