எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி
எம்.ஜி.ஆர். மதித்த முதலாளி, விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ.
திரைப்படத்துறையில் முத்திரை பதித்து முன்னேற்றம் கண்ட நாகிரெட்டியின் வாழ்க்கை வரலாற்று நூல். அவருடைய மகன் விஸ்வம் இந்நூலை எழுதியிருக்கிறார். தினமணி கதிரில் இது தொடராக வெளிவந்தது. திரைப்படத் தயாரிப்புத் தொழிலின் நிதிநிலை ஒரு சமயம் மிகவும் மோசமாக இருந்தது. அப்போது, விஜயா வாகினி ஸ்டுடியோ அதிபரான நாகிரெட்டி, தமது ஸ்டியோவில் படம் பிடித்த தயாரிப்பாளர்களை அழைத்து அவர்களிடம் ஏற்கெனவே தான் ஸ்டுடியோ கட்டணமாகப் பெற்ற தொகையில், ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுத்த சம்பவம் நெகிழ வைக்கிறது. நாகிரெட்டி இயக்கிய ஒரே படமான எங்க வீட்டுப்பெண் சரியாக ஓடாததால் விநியோகஸ்தர்களை அழைத்து முதன்முறையாக நஷ்டஈடும் கொடுத்திருக்கிறார் அவர். எம்.ஜி.ஆர். மதித்த முதலாளியாக நாகிரெட்டி விளங்கியதற்கு இவற்றை விட வேறென்ன தகுதிகள் வேண்டும்? எம்.ஜி.ஆருக்கும் நாகிரெட்டியாருக்கும் இடையே இருந்த நட்பின் ஆழத்தை நம்நாடு படத்தை பத்தே நாள்களில் படம் பிடித்த வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. இது நாகிரெட்டியாரின் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவின் அரை நூற்றாண்டு கால சரித்திரப் பதிவு என்று இந்நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன். அபூர்வ புகைப்படங்கள், அரிய தகவல்களுடன் வெளிவந்திருக்கும் இந்நூல், படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம். நன்றி: தினமணி, 26/10/2015.