சயாம் – பர்மா மரண இரயில் பாதை
சயாம் – பர்மா மரண இரயில் பாதை, சீ. அருண், தமிழோசை பதிப்பகம், பக். 232, விலை 180ரூ.
மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு இலங்கையில் மட்டும்தான் தமிழர்கள் இனப்படுகொலைக்கும், பாலியல் வன்முறைக்கும், சொல்லொணாத் துயருக்கும் ஆளானதாக தற்கால உலகம் அறிந்து வைத்திருக்கும். ஆனால் சயாம் – பர்மா தொடர் வண்டிப்பாதை கட்டுமானத்தில், எண்ணிலடங்கா இன்னல்களை அடைந்து உயிர்நீத்தவர்கள் நம் தமிழ் மூதாதையர்கள் என்ற மறக்கப்பட்ட வரலாற்றை இந்நூல் நமக்கு கண்ணீர் மல்க எடுத்தியம்புகிறது. தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் இந்நூலை வாசிக்க வேண்டும். இந்நூல் மலாயாவில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. தென் ஆப்பிரிக்கா, பிஜி, மோரீஷஸ், சிங்கப்பூர், மலேசியா, பர்மா என உலகெங்கும் வாழும் தமிழர்களின் கண்ணீர்க்குரல் இந்நூலில் ஒலிக்கிறது. சயாமில் ரயில்பாதை அமைப்பதற்கு கை நிறையச் சம்பளம் கொடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட ஆயிரமாயிரம் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாக இருந்துள்ளனர். ஏமாற்றி அங்கே கொண்டு செல்லப்பட்டவர்கள் கொத்தடிமைகளாகி, காலரா, மலேரியா முதலிய நோய்களுக்கும், ஜப்பானியர்களின் கொடுமைகளுக்கும் ஆளாகி மாண்டனர். சயாம் – பர்மா மரண ரயில்பாதை தொடர்பான வரலாற்றைப் பற்றி தமிழில் வெளியாகியுள்ள முதல் நூல் இதுவே என உறுதிபடக் கூறப்படுகிறது. இந்நூலைப் படித்து முடிக்கும்போது இலங்கை அரசுத் தலைவர்களை விடவும் மோசமான கொடுங்கோலர்களாகவும், ஈவு இரக்கமற்றவர்களாகவும் ஜப்பானியர்கள் இருந்ததை அறிய முடிகின்றது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சிலரது பேட்டிகளைப் படிக்கும்போது உருகாத நெஞ்சமும் உருகிவிடும். அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுப் பதிவு இது. நன்றி: தினமணி, 26/10/2015.