சிதைந்த கூடு முதலிய கதைகள்

சிதைந்த கூடு முதலிய கதைகள், ரவீந்திரநாத் தாகூர், சு. கிருஷ்ணமூர்த்தி, சாகித்திய அகாதெமி, பக். 288, விலை 175ரூ.

மகாகவி தாகூர் மாபெரும் கதாசிரியரும்கூட என்பதை இக்கதைத் தொகுப்பு. உள்ளங்கை நெல்லிக்கனியாய் நமக்கு எடுத்துரைக்கிறது. கவித்துவ வரிகளில் ஒவ்வொரு கதையையும் செதுக்கியிருக்கிறார் தாகூர். மகாகவி பாரதியைப் போன்று அங்கதமும் அறச்சினமும் கதைகளினூடே கொப்புளிக்கிறது. வர்ணனையிலும் சரி, ஆழ்மன ரகசியங்களை அம்பலப்படுத்துவதிலும் சரி அற்புதமான படப்பிடிப்பைப் போன்ற வாக்கியங்கள். இந்தத் தொகுப்பு முழுவதும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் பிரதிபிம்பங்கள். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் படும் அவஸ்தைகளுக்காக அவர்களுக்குப் பரிந்து பேசுவதையும், அடிமைத்தனத்திலிருந்து மீண்டு புரட்சி படைக்கும் புதுமைப் பெண்களைக் கதை நாயகிகளாக வடிப்பதையும் நினைப்பதைப் பாருங்கள், இந்தக் கதைகளின் அருமை புரியும். சிதைந்த கூடு கதை, உறவுகளுக்கு இடையேயான சிக்கலான மன உணர்வுகளை அதற்கே உரிய அக்கறையோடு அலசியிருககும் அற்புதப் படைப்பு. மனைவியின் கடிதம் கதையிலோ – பெண்களுக்கு அறிவு ஒரு தொல்லைதான், திட்டுவது தான் பலவீனனுக்கு ஆறுதல், ஒரு தாய் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவாளக இருந்தாலும் உலகத்துக்கே உரியவள் போன்ற வைர வரிகள் விரவிக் கிடக்கின்றன. முதல் நம்பர் கதையின் முடிவு, எதிர்பாராத ஆச்சர்யம். போஷ்டமி கதையின் நாயகி ஆனந்தியின் குணச்சித்திரம் துறவுநிலையின் உன்னதம். அக்கால பிரிட்டீஷாரின் அட்டூழியங்களையும், அதனைத் தட்டிக் கேட்க தைரியம் இல்லாத நம்மவர்களின் பயங்கொள்ளித்தனத்தையும், ஜால்ராதனத்தையும் மேகமும் வெயிலும் தோலுரித்துக் காட்டுகிறது. அந்தக் காலக் கதைகள் என்றாலும் இப்போது படித்தாலும் திகட்டாத நவீன நடை. மொழிபெயர்ப்பாளரும் அதற்கான பாராட்டுக்கு உரியவர். நன்றி: தினமணி, 17/8/2015.

Leave a Reply

Your email address will not be published.