பத்தினிப் பெண்டிர் அல்லோம்

பத்தினிப் பெண்டிர் அல்லோம் (பரத்தையர் கணிகையர் தேவதாசிரியர் பற்றிய பதிவுகள்), அ. கா. அழகர்சாமி, கருத்து – பட்டறை, 2, முதல் தளம், மிதேசு வளாகம், நான்காவது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 90ரூ.

குடும்பப் பெண்கள் அனைவரும் தலைவனின் காலடியில் கிடக்க… தேவதாசிகள் ஆடல், பாடல், கலை வளர்த்த கதையை எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்றன. சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவியான கண்ணகிக்கு இணையான இடம் மாதவிக்கு இருந்தது. அவரது மகளான மணிமேகலையைப் போற்றிப் பாடவே ஒரு காப்பியம் படைக்கப்பட்டது. சுந்தரரின் மனைவியான பரவை நாச்சியாருக்கு தமிழ் இலக்கிய மரபில் பிரிக்க இயலா இடம் உண்டு. பெருங்கதை முழுக்கவே நருமதையும், மதன மஞ்சிகையும்தான் முக்கியப் பாத்திரங்கள். கோயில்களைப் பாடும் பக்தி இலக்கியங்களைப் பாடாமல் இருக்க முடியுமா? காளமேகப் புலவர் தனிப்பாடல்களில் தென்னை மரத்துடனும் பனை மரத்துடனும் ஒப்பிட்டு தேவதாசிகளை வர்ணித்தது இன்றும் பாடங்களாகப் படிக்கப்படுகிறது. இப்படித் தலைவன், தலைவிக்கு அடுத்ததாக அதிகம் பேசப்படுபவர்கள் பரத்தையர். அவர்களது இருண்மை வாழ்க்கையை இயல்பான தமிழில், காமச்சுவை தவிர்த்து அ.கா.அழகர்சாமி தொகத்துள்ளார். ‘உருக்கம் பேசிய நீலியர் காசுகள் பறிக்குந் தோஷிகள் மோக விகாரிகள் உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள்’ என்று அருணகிரிநாதரால் சபிக்கப்படும் தேவதாசிகளது வாழ்க்கை யதார்த்தத்தில் எப்படி இருந்தது? “தலைவியைப் போன்று அச்சம், மடம், நாணம் போன்ற ஆணாதிக்கக் கருத்தியல்களின் அழுத்தம் பரத்தைக்குக் கிடையாது. பரத்தை சுயமாகப் பொருளீட்டிப் பிழைப்பவள். எனவே சுதந்திரமாக வாழ்கிறாள். தலைவி தலைவனுடைய விரலசைவை நோக்கிக் காத்துக்கிடக்க, இவள் தலைவனை நோக்கிக் குரல் உயர்த்திப் பேசுகிறாள். தலைவனை எதிர்த்துப் பேசுதல், குடும்ப நிறுவனத்தைத் தன் பிழைப்புக்காகச் சாராமை, கலைகளைக் கற்று அறிவுநுட்பத்துடன் செயலாற்றுதல் என்று செயலு¡க்கமாக பாத்திரமாக அக இலக்கிய மரபில் பரத்தை படைக்கப்பட்டுள்ளாள்” என்கிறார் அழகர்சாமி. “அந்தக் காலத்தில் பெண்களில் படித்தவர்கள் என்றால் பரத்தை, கணிகையைத்தான் சொல்லவேண்டும்” என்பார் ஆய்வாளர் ராஜ்கௌதமன். அதை உறுதிப்படுத்துவது மாதிரியான ஒரு சந்திப்பு இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. “காலம்பர எந்திரிச்ச உடனேயே ஒரு திருமுறை ஓதுரவரு வருவாரு. அவர் நல்ல தேவாரங்களைச் சொல்லிக்கொடுப்பாரு. அவருக்கு அந்த வீட்டு இருந்து பணம் கொடுப்பாங்க. இவரு திண்ணையில உட்கார்ந்து பாடுவாரு… அம்மா உள்ள உட்கார்ந்து கேட்டுப் பாடுவாங்க. அப்புறம் தமிழாசிரியர் வருவாரு. நல்ல இலக்கண இலக்கிய நயத்தோடு பாடுறதுக்குச் சொல்லிக்கொடுப்பாரு. அப்புறம் சமஸ்கிருத வித்வான் வருவாரு அல்லது தெலுங்கு வித்வான் வருவாரு. அப்புறம் பரத நாட்டிய ஆசிரியர் வருவாரு. ஆட்டம் சொல்லிக்கொடுப்பாரு. அப்புறம் இசையாசிரியர் வருவாரு. பாட்டு சொல்லிக்கொடுப்பாரு. இப்ப ஒரு பெண்ணுக்கு எத்தன ஆசிரியர் இருக்கு? அப்ப ஒரு தேவதாசி எத்தன வாத்தியாருக்குச் சம்பளம் கொடுத்திருக்கா. இதெல்லாம் நடந்திருக்கு. இதெல்லாம் உண்மை” என்று அடுக்குகிறார ஸ்ரீஸத்குரு சங்கீத வித்யாலயத்தின் பேராசிரியர் சாமிநாதன். கோயில்களில் 18 வகையான வேலைகளை இந்தப் பெண்கள் கவனித்ததாகப் பட்டியலிடுகிறார் இவர். இன்றைக்கு நம்முன் கம்பீரமாக நிற்கும் ஆன்மிகப் பிம்பமானது இந்தப் பெண்களாலேயே காலங்காலமாக கட்டமைக்கப்பட்டது என்ற முடிவுக்கே வரவேண்டியது உள்ளது. ஒரு வசைச் சொல்லுக்குப் பின்னால் எத்தகைய வரலாறு புதைக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிய வைக்கிற்து இந்தப் புத்தகம். — புத்தகன் நன்றி: ஜுனியர் விகடன் 29-08-12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *