மாமதுரை

மாமதுரை, பொ. இராசேந்திரன், சொ. சாத்தலிங்கம், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 282, விலை 250ரூ.

பண்டைத் தமிழரின் இதிகாச, புராண, சங்ககால பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது மதுரை மாநகர். மதுரை நகரின் வரலாற்றை எழுதுவது எனும் பணியில் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியர்களின் வரலாற்றை எழுதாமல் எழுத முடியாது என்பதைக் கூறும் நூலாசிரியர்கள் சங்ககாலப் பாண்டியர், முற்காலப் பாண்டியர், பிற்காலப் பாண்டியர் போன்றவர்களைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளனர். பாண்டியர் இல்லையேல் தமிழ் இல்லை எனும் அளவுக்கு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் பாண்டியர்கள். கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பே பாண்டிய மன்னர்கள் உலக அளவில் பன்னாட்டுத் தொடர்புடையவர்களாக இருந்திருக்கின்றனர். பாண்டியர்களைப்போல மிகச்சிறந்த – உயர்ந்த ஆட்சி முறை செய்தவர்களும் இல்லை. அவர்களைப்போல மிகவும் தாழ்நிலைக்குப் போய் அழிந்தவர்களும் இல்லை. அவ்வாறு தாழ்நிலைக்கு அவர்கள் போனதற்கான காரணங்களுள், கடல்கோள் போன்ற பல இயற்கை அழிவுகளாலும், படையெடுப்புகளாலும், ஆக்கிரமிப்புகளாலும் தன் சுயத்தை இழந்ததைச் சொல்லலாம். அதுமட்டுமல்ல, நமது பல்லாயிரக்கணக்கான பண்பாட்டுக் கருவூலங்களும், தமிழக வரலாற்று உண்மைகளும் அழிந்துபோயின. களப்பிரர்களால் அழிக்கப்பட்டன, மறைக்கப்பட்டன, இருட்டிப்புச் செய்யப்பட்டன என்பதே உண்மை. சங்ககால மதுரை, பாண்டியர் -போசாளர் உறவு, இசுலாமியப் படையெடுப்பு, சுல்தான்களின் ஆட்சி, விஜயநகரப் பேரரசு, வாணாதிராயர்கள், மதுரைக் கோயில்கள், திருவிழாக்கள், மதுரை – பாண்டியர் தொடர்பான நடுகற்கள், செப்பேடுகள், கல்வெட்டுகள், நாணயங்கள், திருமலை நாயக்கர் அரண்மனை, பாண்டியர்களின் வம்சாவளிப் பட்டியல், வரலாற்றுத் துகிள், சங்ககாலக் கல்வெட்டுகள் உள்ள இடங்கள் என வண்ணப்புகைப்படங்களோடு கூடிய இவ்வாய்வு நூல் பல உண்மைகளைப் பதிவு செய்துள்ளது. பக்தி இலக்கியத்திற்கும் தமிழக வரலாற்றுத் துறைக்கும் கிடைத்த அற்புதமான வரலாற்றுப் பதிவு. நன்றி: தினமணி, 7/9/2015.

Leave a Reply

Your email address will not be published.