தமிழ்ச்சுரபி

தமிழ்ச்சுரபி (தொகுதி 1), தொகுப்பாசிரியர் விக்கிரமன், இலக்கியபீடம், சென்னை, பக். 544, விலை 450ரூ.

1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமுதசுரபி இதழின் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பாக இந்த தமிழ்ச்சுரபி வெளிவந்திருக்கிறது. இது முதல் தொகுதி. கட்டுரைகளில் ரா.பி. சேதுப்பிள்ளை, கி.வா. ஜகந்நாதன், கி.ஆ.பெ. விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார், பி.ஸ்ரீ. போன்றோர் எழுதியவை தமிழர்களின் மனதில் பதிய வேண்டியவை. பசியற்ற, பண்புள்ள நாடாக தமிழகம் அமைய வேண்டும் என்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை. எனது தலை சிலருடைய திருவடிகளில் மட்டுமே விழுந்திருக்கிறது. அதில் வ.உ.சி. திருவடியும் சேர்ந்ததுதான். காரணம் அவர் பொய் பேசுவதில்லை. உயிர்போகும் வரை ஒழுக்கத்தைக் கையாண்ட ஒரே தலைவர் என்கிறார் கி.ஆ.பெ. விசுவநாதம். தமிழன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்று பட்டியலிடுகிறார் யோகி சுத்தானந்த பாரதியார். பி.ஸ்ரீ. இன் ஆனந்த சுதந்திரம் கட்டுரையில் ஹரிஜனங்களுக்கு ஆலயப் பிரவேசம் கிடைத்துவிட்டது, ஆனால் நாம் நம் இதயக்கோயிலில் பிரவேசம் அளிக்கவில்லை’ என்று தனது வேதனையைத் தெரிவிக்கிறார். இவ்வாறு 44 கட்டுரைகள் இத்தொகுப்பில் உள்ளன. ஒவ்வொன்றும் சிந்தனையைத் தூண்டுபவை. மாயா தொடங்கி வேம்பு வரை எழுதியுள்ள 19 சிறுகதைகளும் இதில் உண்டு. உமாசந்திரன், குகப்பிரியை, எம்.எஸ். கமலா, கரிச்சான்குஞ்சு, ஸ்வாமி ஆத்ரேயன், பெ. தூரன், ஜீவா, பி.எஸ்.ராமையா, க.நா. சுப்பிரமணியம், லா.ச. ராமாமிர்தம், துறைவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அனைத்துக் கதைகளும் மணியானவை. எக்காலத்துக்கும் பொருந்துபவை. ஒன்றையொன்று போட்டி போடும் கதைக் கரு கொண்டவை. அதேபோன்று 19 கவிதைகள். அதில் பெ.நா. அப்புஸ்வாமி, சூடாமணி, சாண்டில்யன் ஆகியோரின் கவிதைகளும் அடக்கம். வித்தியாசமான படைப்புகள். விக்கிரமன் குறைந்தது 53 ஆண்டுகள் அமுதசுரபி ஆசிரியராக இயங்கியிருக்கிறார். அதன்பிறகு இலக்கிய பீடம் இதழை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்து நடத்தியும் வருகிறார். உடல் ஒத்துழைக்க மறுக்கிற நிலையில் இந்த 88ஆவது வயதிலும் பத்திரிகையாளராகவே இயங்கிக் கொண்டிருக்கிறார். முதுமையில் சிந்தனைத் தொடர் பாதிக்கும் என்ற கூற்று பொய் என்பதை விக்கிரமனின் தமிழ்ச்சுரபியைப் படித்து அறிந்துகொள்ளலாம். வருங்காலத் தலைமுறைக்கு அருமையான களஞ்சியத்தைத் தந்திருக்கிறார் விக்கிரமன். நன்றி: தினமணி, 11/5/2015.

Leave a Reply

Your email address will not be published.