மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள்

மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள், ம. இராஜேந்திரன், அடையாளம் வெளியீடு, விலை 180ரூ.

தமிழகப் பழங்குடி மக்கள் தமிழ் மக்கள் சில பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கடமைப்பட்டுள்ளார்கள். அதில் முக்கியமானவர் மெக்கன்சி. கிழக்கிந்தியக் கம்பெனியில் தனது இளம் வயதில் வேலைக்குச் சேர்ந்த மெக்கன்சி, 1783ல் இந்தியாவுக்கு ஒரு பொறியாளராக வந்தார். அவருக்கு இங்கு நில அளவையாளர் பணி கிடைத்தது. 1818ல் இந்தியாவின் தலைமை நில அளவையாளர் ஆனார். இந்தியாவின் நீள அகலங்களை அளந்து நிர்வாகத்தை வடிவமைக்க வேண்டிய காலகட்டம் அது. வெறும் மண்ணைத் தேடிப் போனவர், அங்கு வாழ்ந்த மக்களைப் படிக்க ஆரம்பித்தார். அவர்களது வாழ்க்கையை உணர ஆரம்பித்தார். அவர்களது முன்னோர்கள் யார் என்று தேட ஆரம்பித்தார். அவர்களது பாரம்பர்யத்தைத் தொகுக்க ஆரம்பித்தார். அத்தனையையும் சென்னைக்கு கொண்டுவந்து சேர்த்தார் மெக்கன்சி. கல்லிலும், செம்பிலும், தோலிலும் சுவடியிலும் என கையில் கிடைத்த அத்தனையையும் குவித்தார் மெக்கன்சி. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1568 கல்வெட்டுகள், 8076 ஓவியங்கள், 2630 வரைபடங்கள், 6218 நாணயங்கள், 106 படிமங்கள் என்று சுமார் 3 ஆயிரம் ஆதாரங்களைச் சேகரித்தார். இவற்றை கிழக்கிந்தியக் கம்பெனி அக்கறையுடன் வாங்கிக் கொண்டது. அவரது சேகரிப்புகளைப் பார்த்த சர். கிளிமெண்ட் மார்க்கம் என்பவர், தென்னிந்தியா பற்றிய இலக்கியம் மற்றும் வரலாறு குறித்த நமது அறிவு முழுவதும் மெக்கன்சியின் சுவடிகளில் இருந்தே பெற்றவை ஆகும் என்று சொன்னார் என்றால் மெக்கன்சியின் தொண்டு எவ்வளவு முக்கியமானது என்பதை உணர முடியும். அந்த சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த தகவல்களை மட்டும் தொகுத்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தர் ம. இராசேந்திரன் எழுதிய நூல் இது. பொதுவாக, வரலாறு என்பது மன்னர்களின் வாழ்க்கையையும் அவர்கள் நடத்திய போர்களையும் பற்றியவை மட்டுமே என்று மெக்கன்சி கருதவில்லை என்று சொல்லும் ம. இராசேந்திரன், மெக்கன்சி சுவடிகளில் இருந்து பழங்குடி மக்களின் வகை, வாழ்நிலை, பெண்கள், திருமணம், திருமண முறை, சீர்வரிசை, மறுமணம், உடன்கட்டை, வழிபாடுகள், நம்பிக்கைகள், குற்றமும் தண்டனையும், இறப்பு என்று அனைத்தையும் வரிசைப்படுத்துகிறார். மானுடவியல் ஆய்வு இன்று உலகம் முழுவதும் செழிப்புற்று வருகிறது. அத்தகைய ஆய்வுகளை தமிழகத்தில் நடத்துவதற்குத் தேவையான தரவுகளை தொகுத்துக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் மெக்கன்சி. இப்படிப்பட்ட மெக்கன்சிக்கு மரியாதை செலுத்த நினைப்பவர்கள் சென்னைப் பல்கலைக்கழக நூலகக் கட்டடத்தின் மேற்குப் பகுதியில் உள்ள முதல் மாடிக்கு ஒருமுறை சென்று வாருங்கள். அங்கேதான் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை விளக்கும் மெக்கன்சியின் சேகரிப்புகள் மொத்தமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 24/5/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *