பிஸினஸ் மகாராணிகள்
பிஸினஸ் மகாராணிகள், சு. கவிதை, குமுதம் புது(த்)தகம், பக். 136, விலை 95ரூ.
தாங்கள் வாழும் சூழ்நிலையை மீறி, ஜெயிக்கும் பெண்கள் பற்றிய சாதனைத் தொகுப்பு இந்நூல். குமுதம் சிநேகிதியில் தொடராக வந்தபோது பல பெண்களின் வாழ்வில் சாதிக்க தூண்டுகோலாகவும், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருந்தது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் எல்லாம் பெண்களும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய கிரண் மஜுர்தார்ஷா வினிதாபாலி, லீனாநாயர், இந்திராநூயி உள்ளிட்ட பல பிஸினஸ் மகாராணிகளின் அனுபவங்கள் தன்னம்பிக்கை ஊட்டுவன. அவர்கள் தரும் சக்ஸஸ் டிப்ஸகள், சவால்களை எதிர் கொள்வது எப்படி? சோதனைக் காலங்களில் அதை சாதனை ஆக்குவது எப்படி? என்று பிஸினஸில் வெற்றியைத் தொட என்னென்ன வழிகள் உள்ளனவோ அவ்வளவையும் அவர்களே நம்முன் தோன்றி கற்பிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் நூல். சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு நல்ல வழிகாட்டி நூல். நன்றி: குமுதம், 18/5/2015.
—-
வெற்றியின் நிகழ்ச்சி வாழ்வின் வளர்ச்சி, மெர்வின், குமரன் பதிப்பகம், பக். 184, விலை 70ரூ.
நீண்டகாலமாக வெற்றிக்கு வழிகாட்டும் கருத்துக்களை இளைஞர்கள் மனதில் ஆழமாகப் பதிப்பித்து வருபவர் மெர்வின். ஒரு நிகழ்ச்சிதான் இன்னொரு நிகழ்ச்சிக்கு உந்துசக்தி. அதுதான் வாழ்க்கைக்கு வழிகாட்டும் பூச்சரம். அந்த வெற்றி வரலாற்றை எளிய முறையில், உலக அறிஞர்களின் வாழக்கை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி தந்துள்ளார். யார் படித்தாலும் வெற்றியை அடைய முடியும் என்ற எண்ணத்தில் மனதில் பதியும்படியான தமிழில் அழகாக எழுதியுள்ளார். இந்நூலைப் படிப்பவர்கள் ஏதேனும் ஒரு துறையில் வெற்றியை நோக்கி பயணம் செய்வது உறுதி. நன்றி: குமுதம், 18/5/2015.