இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும்
இந்திய நாட்டின் இனிய விழாக்களும் விரதங்களும், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 328, விலை 245ரூ.
இந்திய மாநிலங்கள், மக்கள் இறை நம்பிக்கை, வணங்கப்படும் தெய்வங்கள், விரதங்கள், சம்பிரதாயங்கள், சடங்குகள், மாறுபட்ட வழிமுறைகள், மாநில வாரியாகக் கொண்டாடப்படும் விழாக்கள் அவற்றின் தாத்பரியங்களை அழகாக விளக்குகிறது இந்நூல். பொதுவாக காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை, அந்தந்த மாநிலங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்த விழாக்களுக்கான புராண நிகழ்வுகளும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராஜஸ்தான் மேவாரில் கொண்டாடப்படும் டீஜ் விழா, பார்வதி தேவிக்கானது. இதைத் திருமணமான பெண்கள் தங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையக் கொண்டாடுகின்றனர். சிக்கிம் நகரத்தில் லூசூங் எனப்படும புத்த மத திருவிழா, உத்தரப்பிரதேசத்தில் பகவான் கிருஷ்ணர் மீது கொண்டுள்ள ஆழமான பக்தியைத் தெரிவிக்கும் லத்மார் ஹோலி விழா, அசாமின் முக்கிய திருவிழாவான பிஹு, மகாராஷ்டிராவில் கொண்டாடப்படும் கணேஷ் சதுர்த்தி, ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் கொண்டாடப்படும் பாதுகம்மா விழா என்பது, சோழ மன்னன் ஒருவனுக்கு லட்சுமி தேவியே மகளாகப் பிறந்து பல தடைகளையும் தாண்டி வளர்ந்து வந்ததைக் குறிப்பிட்டு மலர்களால் லட்சுமி தேவியை உருவாக்கிக் கொண்டாடுகின்றனர் ஆந்திரப் பெண்கள். தமிழ் நாட்டில் பொங்கல் விழா, கேரளத்தின் விஷு என்று அனைத்து விழாக்களையும் விளக்கியிருப்பதுடன் ஆன்மிக சுற்றுலா செல்வோருக்குப் பயன்படும் விதத்தில் தங்குமிடங்கள் முகவரியுடன் அளிக்கப்பட்டுள்ளன. சாவித்திரி விரதம், நாக பஞ்சமி, துர்க்கா பூஜை, ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, சிவராத்திரி, தீபாவளி, தசரா முதலிய பண்டிகைகள், விரதங்கள் என்னும் தலைப்பில் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமணி, 25/5/2015.