மக்கள் கண்ட மகான்கள்
மக்கள் கண்ட மகான்கள், எம்.எஸ். பிந்துமாதவன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ.
பாரதத்தில் தோன்றிய வேத மகரிஷிகள், தெய்விக புருஷர்கள், மகான்கள், சாதுக்கள் போன்றோரின் வாழ்க்கை நெறி, இறைவனிடம் மகான்கள் கொண்ட பக்தியின் பெருமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது இந்நூல். இதில் கபீர் தாசர், துளசி தாசர், புரந்தர தாசர், ஸ்ரீ ராகவேந்திரர், மீரா பாய், சக்கு பாய் ஆகிய 31 மகான்களின் ஆன்மிக சரித்திரம் அடங்கியுள்ளது. பத்து வயது சிறுமியான சக்கு பாய் தோழியருடன் மணல் வீடு கட்டி விளையாடுகிறாள். அந்த நேரத்தில் தம்புராவை மீட்டிக் கொண்டு வந்த முதியவர் ஒருவர் கவனிக்காமல் மணல் வீட்டை மிதித்துச் செல்கிறார். சக்கு பாய் அவர் செய்த தவற்றைச் சுட்டிக்காட்டி, அதற்குப் பிராய்ச்சித்தமாக தம்புராவைப் பெற்றுக்கொள்கிறாள். அதன் பிறகு அவளது செயல்களில் மாறுதல்கள் உண்டாகிறது. இறைவன் பாண்டுரங்கனின் மீது அதிக பக்தி கொண்டு இறை வழிபாட்டில் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாள். திருமணமான பின்னரும் இறை பக்தியை சக்குபாய் கைவிடவில்லை. இது குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் பிடிக்காமல் போகவே, அவளைப் பலவாறாக ஏசுகின்றனர். பின்னர் இறைவனின் கருணையால் தாம் விரும்பியபடி பாண்டுரங்கனின் விழாவைக் காண பண்டரிபுரம் செல்கிறாள். ராம சரித மானஸ் என்ற துளசி ராமாயணத்தை எழுதியவர் துளசிதாசர். அவர் துறவியான வரலாறு கூறப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மகான்களின் பக்தி நெறி கொண்ட வாழ்க்கை வரலாறுகள் சுருக்கமாகவும் மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்திலும் எளிமையாக எழுதியுள்ளார் ஆசிரியர். ஆன்மிக ஈடுபாடுடைய அன்பவர்களுக்கு இந்த நூல் ஒரு பயனுள்ள பொக்கிஷம். நன்றி: தினமணி, 25/5/2015.