ஆன்மாவின் பயணங்கள்
ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 280, விலை 210ரூ.
ஆன்மா பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; என்றும் இருப்பது. நமது ஆடை நைந்து போன பிறகு அதனைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய ஆடையை அணிவதுபோல, ஆன்மாவின் ஆடை போன்ற இந்த உடல் சாய்ந்துபோன பிறகு புதிய உடலுக்குள் புகுந்து ஆன்மா இயங்குகிறது என்று கூறுகிறது பகவத்கீதை. அமெரிக்க மனநல மருத்துவரான பிரைன் வைஸ் எழுதிய Many lives Many Matters. Only love is Red ஆகிய நூல்கள் தற்போது பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் அவர் எழுதிய Messages from the Masters என்ற ஆங்கில நூலை மையமாகவும் நிரூபண நிகழ்வுகளைக் கருவாகவும் கொண்டு எழுதப்பட்ட மொழி பெயர்ப்பு நூல் இது. இந்நூலாசிரியரான அமெரிக்க மனநல மருத்துவர் பிரைன்வைஸ், மனோதத்துவ ரீதியாக நோயாளிகளை ஆழ்ந்லை உணர்வுகளுக்கு உட்படுத்தி, பழைய முற்பிறப்பின் இன்ப-துன்ப நிகழ்வுகளில் திளைக்க வைத்து நோயைக் குணப்படுத்துவதில் பிரபலமானவர். நினைவு கூறல் மூலமாக நோய்க்கு சிகிச்சை அளித்து ஒரு புதிய உத்தியைக் கையாண்டு பல நோயாளிகளைக் குணப்படுத்தி வருகிறார். அவரின் பரிசோதனைகள் நோயாளிகளை சிகிச்சைக்கு உட்படுத்துகின்ற முறைகள் போன்ற செயல்பாடுகளை மருத்துவர் பிரைன் வைஸ் நேரிடையாக நம்மிடம் விளக்குவது போன்று அமைந்துள்ளது இந்நூல். வாழ்க்கைச் சூழல், மீண்டும் பிறப்பெடுத்தல், அன்பால் உறவை உருவாக்குதல், அறிவால் புரிதலைக் கற்றுக்கொள்ளுதல், மகிழ்ச்சிக்குத் தடையாக உள்ளவற்றை நிக்குவது, பாதுகாப்பற்ற உணர்வை விட்டொழித்தல், உள் ஒளியைக் கண்டுபிடித்தல், மகிழ்ச்சிக்கான திறவுகோல், மனோவசியம், இறவாத் தன்மை, நீண்ட தியானப் பயிற்சிகள் ஆகிய 35 தலைப்புகளின் மூலம் ஆன்மா பல பிறவிகளை எடுத்து பயணிக்கும் தன்மைகளை விவரித்துள்ளார். மொழிபெயர்ப்பு என்பதையும் மறந்து, மூல நூலைப் படிப்பதைப் போன்றதொரு உணர்வையும், பல அரிய அற்புத நிகழ்வுகளோடு நம் ஆன்மாவைப் பயணிக்க வைக்கிறார் மொழிபெயர்ப்பாளர். நன்றி: தினமணி, 11/5/2015.