ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள்
ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள் ஆளுமைகள், ஆ. இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 225ரூ.
வரலாற்றை வெற்றி கொள்ளும் வழி!
பாரதி, வ.உ.சி., மறைமலையடிகள், புதுமைப்பித்தன் ஆகியோரது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் மீது ஆ.இரா.வேங்கடாசலபதியின் எழுத்துக்கள் இதுவரை வெளிச்சம் பாய்ச்சி வந்ததை அறிவோம். இதோ இப்போது இந்த வரிசை மேலும் கூடுகிறது…
ஜி.யு.போப், உ.வே.சாமிநாதையர், ம.வீ.இராமானுஜாசாரியர், டி.வி.சாம்பசிவம் பிள்ளை, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார், ரா.அ.பத்மநாபன், ஸி.எஸ்.சுப்பிரமணியம், தே.வீரராகவன் ஆகிய ஆளுமைகளின் பன்முகத்திறமைகள் அடையாளப்படுத்துகின்றன.
இவர்களோடு பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ், எரிக் ஹாப்ஸ்பாம் ஆகியோரது திறனும் சொல்லப்படுகிறது.அனைத்துக்கும் மேலாக, வாஞ்சிநாதனால் மணியாச்சி ரயில் நிலையத்தில சுட்டுக்கொல்லப்பட்ட ஆஷ் குடும்பத்தின் கதையும் காட்சிகளாய் விரிகிறது. இப்படி 13 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப்புத்தகம்.
சலபதியின் கட்டுரைத் தொகுப்பாக, ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ வெளியாகிப் பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது இந்த நூல் வந்துள்ளது. ஆய்வாளர்களுக்கு சமூக நோக்கு இருப்பது இல்லை. சமூக நோக்கம் கொண்டவர்களால் எழுதப்பட்டவை ஆய்வுகளாக இருப்பது இல்லை. இந்த இரண்டு வரையறைகளையும் மீறி சமூகநீதி அடித்தளம் தாங்கியவைகளாக சலபதியின் ஆய்வுகள் எப்போதும் அமையும். அதனால்தான் அவர் எப்போது எதைப்பற்றி எழுதினாலும் அதிகக் கவனம் பெறும். அப்படி கவனம் பெற வேண்டிய கட்டுரைகள் இவை. ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக அவரது படைப்புகள் எப்போதும் இருப்பது இல்லை.
எழுதப்படாத பக்கங்களைத் தேடுபவையாக, எழுதப்பட்டவைகளின் தவறுகளைச் சுட்டுக் காட்டுபவைகளாக சலபதியின் எழுத்துகள் அமையும். போப் தனது கல்லறையில் ‘தமிழ் மாணவன்’ என்று எழுதச் சொன்னார். உண்மையில் இப்படி எழுதப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அந்த கல்லறையைத் தேடிச் செல்வதும், ஆஷை ஒரு பக்கம் அரக்கனாகவும் இன்னொரு பக்கம் புனிதனாகவும் கட்டமைக்கும் காலத்தில் ஆஷ் வீட்டுக்கே சென்று ஆவணங்களைத் தேடுவதும்தான் சலபதியின் பாணி.
தொழிற்சங்க இயக்கத்தால் உண்டு கொழுத்தோர் அமைதியாக இருக்க, பார்வையற்ற தே. வீரராகவன் அதன் வரலாற்றை எழுதியது விநோத முரண்களில் ஒன்று. அந்த வீரராகவனின் வரலாற்றை எழுதவும் சலபதிகளால்தான் முடியும்.
“காலத்துக்கும் வரலாற்றாளனுக்குமான உறவு நேரடியானது. காலத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் அதை அவன் வெற்றி கொள்ள முயல்கிறான்” என்கிறார் சலபதி. காலத்தோடும் வரலாற்றோடும் நம்மை பயணிக்க வைக்கும் எழுத்துகள் அவருடையவை.
-புத்தகன்.
நன்றி: ஜுனியர் விகடன், 20/8/2017,