அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும்

அகநானூறு – ராஜகோபாலார்யன் உரையும் உரைநெறியும், பதிப்பும் ஆய்வும்: மா.பரமசிவன், இராசகுணா பதிப்பகம்,  பக்.374, விலை ரூ.300.

அகநானூற்றுக்கு இதுவரை 17க்கும் மேற்பட்ட சிறந்த உரைகள் (கவிதை, வசனநடை நீங்கலாக) வெளிவந்துள்ளன. ‘கம்பர் விலாசம் 39’ ராஜகோபாலார்யன் என்ற உரையாசிரியர்தான் அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியர் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.

20ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டு வெளிவந்த முதல் உரை நூல் ராஜகோபாலார்யன் உரைநூல்தான். இவர், தம் உரையை குறிப்புரை என்றே குறிப்பிட்டுள்ளார். அவர் பதிப்பு நெறி, பதிப்பு அறங்களைக் கைக்கொண்டு அகநானூற்றைப் பதிப்பித்திருக்கிறார்.

இவர், 91 முதல் 400 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஆனால், நமக்குக் கிடைப்பதோ 91 முதல் 160 பாடல்கள் மட்டுமே. இந்த உரைப்பகுதிகளும் நமக்குக் கிடைக்கக் காரணம், மு. இராகவையங்காரின் முயற்சியேயாகும். 1918இல் அகநானூற்றின் களிற்றி யானை நிரை என்ற பகுதியை மட்டும் முதற்பதிப்பாக வெளியிட்டுள்ளார். ஆனால் அந்தப் பதிப்பு கிடைக்கவில்லை. அடுத்து 1920இல் நூல் முழுவதையும் முன்னுரை முதலான எந்தவிதக் குறிப்புகளும் இல்லாமல் பதிப்பித்துள்ளார்.

இப்பதிப்பில் 90 பாடல்களுக்குப் பழைய உரையையும், 56 பாடல்களுக்குக் குறிப்புரையும் பதிப்பித்துள்ளார். 1923இல் நூல் முழுமைக்கும் முன்னுரை முதலான குறிப்புகளுடன் முதல் 90 பாடல்களுக்குப் பழைய உரை, 56 பாடல்களுக்குக் குறிப்புரை ஆகியவற்றையும் சேர்த்து பதிப்பித்துள்ளார்.

ராஜகோபாலார்யன் உரை, ராஜகோபாலார்யன் உரைநெறி, ராஜகோபாலார்யன் வாசிப்புக் கருத்தியல், பாடவேறுபாடுகள், குறிப்புரை முதலிய நூற்பகுதிகளுடன், ராஜகோபாலார்யன் எழுதிய நூல்கள், வாழ்க்கைக் குறிப்பு, முதற்பதிப்பு, இரண்டாம் பதிப்பின் முகவுரை, அன்றைய தமிழ்ப் புலவர், புரவலர் பற்றிய விவரம் முதலான பதினாறு பின்னிணைப்புகளையும் கொண்டு, அகநானூறு பற்றிய முழுமையான புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது.

நன்றி: தினமணி, 24/7/20107

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *