அன்பே ஆரமுதே
அன்பே ஆரமுதே, தி.ஜானகிராமன், காலச்சுவடு பதிப்பகம், விலை ரூ.500/-
மருத்துவர்கள் எல்லாக் காலத்திலுமே கடவுளுக்கு இணையாகவே மதிக்கப்பட்டுவருகிறார்கள். என்றாலும், இந்த கரோனா காலம் எப்போதைவிடவும் இப்போது மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் மிகுந்த நன்றியுணர்வோடு பார்க்கிற சூழலை உருவாக்கியிருக்கிறது. மனிதர்களின் இன்ப துன்பங்களை விசாரணைக்கு உட்படுத்தும் இலக்கியங்களில் துயரம் தீர்க்கும் மருத்துவர்களுக்கும் இடமில்லாமல் இருக்குமா? தன்னலமற்ற மருத்துவர் ஒருவரைப் பற்றிய மகத்தான சித்திரத்தைத் தமிழுக்கு அளித்திருக்கிறார் தி.ஜானகிராமன்.
‘அன்பே ஆரமுதே’ நாவலின் நாயகனான அனந்தசாமி, ஒரு மருத்துவர். எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் இல்லை. சந்நியாசத்தோடு வைத்தியமும் கற்றுக்கொண்டவர். தினம் பத்து பேர் என்று கணக்கு வைத்துக்கொண்டு, அன்றைய சென்னையில் வீடு தேடிச் சென்று வைத்தியம் பார்த்தவர். கணுக்கால் வரையில் ஒரு தட்டுச் சுற்று பழுப்புநிற வேஷ்டி, மார்பின் குறுக்கே ஒரு நான்கு முழத் துண்டு, தோளில் தொங்கும் ஐந்நூறு, அறுநூறு மருந்துப் பொட்டணங்களைக் கொண்ட ஒரு கேன்வாஸ் பை… இதுதான் அனந்தசாமியின் அடையாளம். பார்த்தவாக்கில் வைத்தியர் என்று சொல்வது கடினம் என்று அவரை விவரிக்கிறார் தி.ஜா.
ஆறு மாதங்கள் படுத்த படுக்கையாகக் கிடந்த தாயை அவரே பராமரித்தார். சகோதரர்கள் அரை டஜன் இருந்தாலும் அவரேதான் அருகிருந்து கவனித்துக்கொண்டார். அவர் கெஞ்சிக் கேட்டபோதும் பெரிய டாக்டரை அழைத்துவந்து காட்ட அவள் ஒத்துக்கொள்ளவில்லை. அம்மாவை வழியனுப்பிவைத்த பிறகு, தான் சிகிச்சையளிக்கும் சகலரையும் தாயாகவே பார்க்கிறது அவரது உள்ளம்.
நோய்க்குச் சிகிச்சையளிப்பதோடு அவர்களது ஆழ்மனதை அரித்துக்கொண்டிருக்கும் சங்கடங்கள் தீர வேண்டும் என்று ராமநாமம் ஜெபிப்பவர். அமிர்தத்தை மருந்திலும் சொல்லிலும் வழங்கித் திரிபவர். ஆனாலும், பெற்றவளின் உயிர் பிரிந்தபோது, அவரிடம் சொல்வதற்குக் குறையொன்றும் இருக்கத்தான் செய்தது.
குடும்பம் என்று அவருக்கு ஒன்றில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மணமேடை ஏறுவதற்கு முன்பாக அவர் விட்டுப் பிரிந்த ருக்மணி அவருக்காகவே காத்திருந்து அவரோடு ஒரு கூரையின் கீழ் உட்கார்ந்துவிட்டாள் என்பதுதான் இந்நாவலின் கதை. அப்போதும் அனந்தசாமியின் சந்நியாசமும் வைத்தியமும் தொடரவே செய்கிறது.
ஊருக்கென்று வாழும் ஓர் உத்தமரைச் சித்தரிக்க தி.ஜா. கையாண்டிருக்கும் வைத்தியர் கதாபாத்திரம் மிகவும் பொருத்தமானது. பெரும் வியாதிகளைக் கூட அனந்தசாமி குணப்படுத்திவிடுவார். டாக்டர்கள் கைவிட்ட நோய்களையும்கூட அவர் விரட்டியடித்திடுவார். ஆனாலும், மருந்து கொடுத்து ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் பொறுப்பு, குணப்படுத்துவது பகவான் பொறுப்பு என்று நினைப்பவர்.
காய்ச்சல் கண்டு எழுந்து நடக்க முடியாத நிலையிலும், தேடி வருகிறவர்களுக்காக வைத்தியம் பார்க்கிறார். பையை எடுத்துத் தரச்சொல்லி, அதிலிருந்து மருந்துகளை எடுத்துக்கொடுத்து அனுப்புகிறார். அனந்தசாமியின் வைத்தியத்தில் வியாதிக்கெல்லாம் பேர் கிடையாது. மனசு, உடம்பு இரண்டையும் பழைய நிலைக்குக் கொண்டுவந்துவிட்டால் வியாதி இல்லையென்று அர்த்தம். இன்று நோயைக் கண்டறிந்த மாத்திரத்தில் அதற்கு பெயர்வைத்துவிடுகிறோம். காரணமும் தெரியவில்லை. மருந்தும் தெரியவில்லை. எனவே, உடம்போடு மனசையும் சேர்த்து பழைய நிலைக்குக் கொண்டுவந்தாக வேண்டியிருக்கிறது. நமது மருத்துவ முறைகளையும்கூட மறுபரிசீலனை செய்யும் நிலையில் இருக்கிறோம். இந்நிலையில், அனந்தசாமியின் கதாபாத்திரம் நினைவில் உயிர்பெற்று எழுந்து நடமாடுகிறது.
நன்றி: தமிழ் இந்து, 23.05.2020.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000003938_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818