பாரதியார் பதில்கள்

பாரதியார் பதில்கள், ஔவை அருள், ஸ்ரீராம் பதிப்பகம், பக். 148.

மகாகவி பாரதியின் 137-ஆவது பிறந்தநாள் விழாவில் (2.2.2019) வெளியான இந்நூலை, தமிழறிஞர் ஔவை நடராஜனின் புதல்வரும், தமிழறிஞருமான இந்நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இது ஸ்ரீராம் நிறுவனங்களின் ஆதரவில் உருவாகி, படிக்க விரும்புபவர்களுக்கு விலையில்லாத அன்பளிப்பாக வழங்கும் வகையில் வெளியிட்டப்பட்டுள்ளது. பாரதியாரைப் பற்றி அனேக நூல்கள் வெளியாகியிருந்தாலும், அவற்றைவிட இந்நூல் மிக வித்தியாசமானது என்பதோடு, இக்காலச் சிறுவர் சிறுமியருக்கும், இளைஞர்களுக்கும் மிக எளிய முறையில் பாரதியின் பல்வேறு பரிமாணங்களைப் புரிய வைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

கேள்வி – பதில்கள் வடிவில் இந்நூல் அமைந்துள்ளதால், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. பாரதியைப் பற்றி எளிதில் படிப்பதற்கும், புரிவதற்கும், நினைவில் கொள்வதற்கும் மிக எளிதான வகையில் உள்ளது. குறிப்பாக, பாரதியின் இளமைப் பருவம் எப்படிப்பட்டது? இளமைப் பருவத்தில் தன்னைப் பழித்த புலவரை பாரதி எப்படி மடக்கினார்?

பாரதி பாடியதும் பாடாததும் எவையெவை? பாரதியின் உரைநடைப் பண்பு எத்தகையது? உலர்ந்த தமிழன் உருவாக வேண்டும் என்று பாரதி குறிப்பிடுவது எதை? பாரதியின் பாப்பா பாட்டால் நாம் அறிவன யாவை? ‘சக்திதாசன்’ என்று பாரதி தனக்கு புனைப்பெயர் பூண்டது ஏன்? பாரதி வலியுறுத்திய தேசியக் கல்விக் கொள்கை யாது? காந்திஜி பாரதியார் சந்திப்பு எவ்வாறு நடந்தது?

இப்படி இந்நூலில் 100 கேள்விகள் பல்வேறு கோணங்களில் கேட்கப்பட்டு, அவற்றுக்கான பதில்கள் அவரது படைப்புகளைக் கொண்டும், அவர் காலத்தில் இருந்த சூழ்நிலையைக் கொண்டும், அவரது வரலாற்றைக் கொண்டும் தெளிவாக விளக்கியுள்ளார் இந்நூலாசிரியர்.

பாரதியாரைப் பற்றிய பல செய்திகளை உள்ளடக்கிய இந்நூல், பாரதியாரின் ஆர்வலர்களுக்கு மிகவும் பயன்தரத்தக்கது.

-பரக்கத்.

நன்றி:துக்ளக், 1/5/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *