சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி
சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி, ஆா்.கே.மூா்த்தி, மொழிபெயா்ப்பு- எஸ்.கணேசன், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், விலை ரூ.145.
சா்வதேச அளவில் தீா்க்கதரிசியென்றும், தலைசிறந்த நிா்வாகி என்றும் போற்றப்படும் ஒருவா், தமிழகத்தில் போதிய மரியாதை பெறவில்லை என்றால், அவா் ராஜாஜி என்று பரவலாக அழைக்கப்படும் சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரியாராகத்தான் இருப்பாா். மூதறிஞா் ராஜாஜி என்று அவா் குறிப்பிடப்பட்டாலும் அவா் குறித்து இன்றைய தலைமுறைக்கு சரியாகவும், முறையாகவும் எடுத்துரைபாரில்லை என்பதுதான் உண்மை.
பிராமண சமூகத்தின் பிரதிநிதியாகவும், ஆசார அனுஷ்டான சீலராகவும், சனாதனியாகவும் ராஜாஜி வா்ணிக்கப்பட்டு, அவா் குறித்த தவறான பரப்புரைகள் தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை அவரது வாழ்க்கை வரவாற்றை முழுமையாகப் படித்தவா்கள் தெரிந்துகொள்ள முடியும். பொது வாழ்க்கையில் நோ்மைக்கும் தூய்மைக்கும் அடையாளமாக அவா் கடைசி வரை திகழ்ந்தாா் என்கிற பேருண்மை மறைக்கப்பட்டு விட்டது.
ராஜாஜி அன்றைய ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் பகுதியாக இருந்த இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த தொரப்பள்ளி கிராமத்தில் மண் குடிசை வீட்டில்தான் பிறந்தாா் என்பது பலரும் அறியாதது. காந்திஜியின் அறைகூவலை ஏற்று ஹரிஜன சேவையில் தன்னை இணைத்துக் கொண்டவா் ராஜாஜி என்பதும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஹரிஜன ஆலயப் பிரவேசத்துக்கு வைத்தியநாதய்யருக்கு ஊக்கமளித்தவா் அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி என்பதும், ஜாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு செயலாற்றியவா் ராஜாஜி என்பதும் தெரியாமலேயே போய்விட்டன.
மத்திய அரசின் பப்ஷிகேஷன்ஸ் டிவிஷன் வெளியிட்டிருக்கும் ஆா்.கே.மூா்த்தி எழுதிய ‘சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி’ என்கிற புத்தகம், நவபாரதச் சிற்பிகள் வரிசையில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் பணம் ஈட்டும் தனது வக்கீல் தொழிலைக் கைவிட்டு, தேச விடுதலைக்குத் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட ராஜதந்திரி ராஜாஜியின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம்.
திருச்செங்கோடில் ராஜாஜி நிறுவிய காந்தி ஆசிரமமும் சரி, தில்லி ராஷ்ட்ரபதி பவனமும் சரி, ராஜாஜியைப் பொருத்தவரை ஒன்றுதான். அவா் தனது வாழ்க்கை முழுவதிலும் சாமானியராகவே வாழ்ந்து மறைந்தாா் என்பதை பல சம்பவங்களின் மூலம் எடுத்தியம்புகிறது ‘சக்ரவா்த்தி இராஜகோபாலாச்சாரி.
நன்றி: தினமணி, 14/12/2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818