எழுச்சிநாயகன் விவேகானந்தர்
எழுச்சிநாயகன் விவேகானந்தர் சி.எஸ்.தேவநாதன், எஸ்.எஸ்.பப்ளிகேஷன், பக்.192, விலை ரூ.120.
விவேகானந்தரின் இளமைக் காலத்திலிருந்து அவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் இதனைச் சொல்லலாம். ஆனால் அந்த எல்லையோடு இந்நூல் நின்றுவிடவில்லை. விவேகானந்தரின் சிந்தனைகள் வளர்ந்தவிதம், ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் அவருடைய தெளிவான கருத்துகள் தோன்றியவிதம் ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது.
விவேகானந்தரின் வாலிபப் பருவத்தில், அவரை விரும்பி அவர் இருக்கும் இடத்துக்கு இரவில் வந்த ஓர் இளம் பெண்ணைப் பார்த்து, “”அம்மா, இது தகாத காரியம் என்பதை உணருங்கள். உடனே இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என்று விவேகானந்தர் சொன்னது மனதைத் தொடுகிறது.
நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல இடங்களுக்குச் சென்று அவர் பரப்பிய கருத்துகள், நூலில் முக்கிய இடம் பெறுகின்றன. வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாக பார்க்காமல், வாழ்க்கையை முன்னோக்கித் தள்ளும் விசையாக வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகள் இருப்பதை நூல் சொல்கிறது. இதன்மூலம், விவேகானந்தரின் உயரிய பல கருத்துகள் வாசகர்களின் மனதில் எளிதாகவும், ஆழமாகவும் பதியும் வாய்ப்புக் கிட்டுகிறது.
அதேசமயம் விவேகானந்தரைப் பற்றி தெரியாதவர்களுக்கு அவரைப் பற்றிய நல்ல அறிமுகமாகவும் இந்நூல் திகழ்கிறது. நூலைப் படித்து முடித்தாலும் அவருடைய நல்ல கருத்துகள் மனதில் அலைவீசிக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி, 17/7/2016.