கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள்
கா.சு.பிள்ளை சைவப் பெருமக்கள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.674, விலை ரூ.680.
சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கா.சு.பிள்ளை என்று அழைக்கப்படும் கா.சுப்பிரமணிய பிள்ளை. இவர் 1925 – இல் எழுதி வெளியிட்ட சைவ சித்தாந்த சந்தானாச்சாரியர்களும் அவர்களின் அருள் நூல்களும் என்ற நூலும், சைவ சித்தாந்த விளக்கம் எனும் நூலும், 1930 – இல் அவர் எழுதி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் வெளியிடப்பட்ட தாயுமானவ சுவாமிகள் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலும், பட்டினத்தடிகளின் காலமும் வரலாறும் என்ற நூலும், 1932 – இல் அதே கழகம் வெளியிட்ட இவரது குமரகுருபர அடிகள் சிவஞான சுவாமிகள் ஆகிய நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ஒரே நூலாக ஆக்கப்பட்டுள்ளது.
சைவ சமயத்தில் சந்தானாச்சாரியார்கள் எனப் புகழப்படும் மெய்கண்டார், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் ஆகியோருடைய வரலாறுகளும் அவர்கள் இயற்றிய நூல்கள் குறித்த விவரங்களும் மேற்கோளாக ஓரிரு பாடல்களைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளன.
தாயுமான சுவாமிகள் குறித்த கட்டுரையில் அவருடைய வாழ்க்கை வரலாறு சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. இறை வழிபாட்டின் இன்றியமையாமை, உடற்சித்தி உயிர்முத்திக்குத் துணையாதல், நால்வகை சாதனை இயல்பு, பேரன்பர் திறம் ஆகிய அரும்பொருள்களின் சார்பாய உண்மைகள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
பட்டினத்தடிகள் குறித்த கட்டுரையில் அவருடைய காலமும் வரலாறும் கூறப்பட்டுள்ளன. பதினோராம் திருமுறையில் சேர்க்கப்படாத பல பாடல்கள் அடிகள் பெயரில் உள்ளன. அவை பட்டினத்தடிகள் இயற்றியதாகத் தெரியவில்லை என்ற போதிலும் பொருள்நயம் கருதி அவற்றையும் இணைத்துள்ளார் ஆசிரியர்.
குமரகுருபரரின் வரலாறு சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. அவர் இயற்றிய நூல்கள் குறித்த விவரமும் அவருடைய ஆராய்ச்சி முறையும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன.
மெய்கண்டார் இயற்றிய சைவ சிந்தாந்த சூத்திரமாகிய சிவஞான போதத்திற்கு பேருரை எழுதிய சிவஞான முனிவரின் வரலாறும் அவரின் நூலாராய்ச்சியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கா.சு.பிள்ளை தமிழுக்கும் சைவத்திற்கும் அளித்திருக்கும் பெருங்கொடை இத்தொகுப்பு நூல்.
நன்றி: தினமணி, 31/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818