கணினித் தமிழ்

கணினித் தமிழ், இல. சுந்தரம், விகடன் பிரசுரம், பக். 368, விலை 230ரூ.

கணினி, இணையம் இவை இன்று மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறி வருகின்றன. இந்நிலையில் இவற்றைப் பற்றிய புரிதலை அனைத்துத் தரப்பினருக்கும் உண்டாக்கும் வகையில், ‘கணினித் தமிழ்’ என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து அலகுகளில் ஆசிரியர் கணினி, இணையம் சார்ந்த செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

கணினியின் பாகங்கள், அதன் செயல்பாடு, அதில் பயன்படும் வன்பொருட்கள், மென்பொருட்கள், இன்று பெருகி வரும் நவீன மொபைல்பேசிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்கள், தொகுப்பு மென்பொருட்கள், கையடக்க மென்பொருட்கள், குறுஞ்செயலிகள் (APPS), மின்படிப்பான்கள், Bit, KB, MB, GB முதலிய கொள்ளளவுகள், சொற்சுருக்கம்-விரிவு, கோப்புச் சுருக்கம்-விரிவு என ஒரு கணினி பயன்படுத்துவோர் அறிய, அறிந்திருக்க வேண்டிய அத்தனை அடிப்படைச் செய்திகளையும் இந்நூலின் முதற்பகுதி எடுத்துரைக்கிறது.

கணினி, இணையம் இவற்றைப் பயன்படுத்துவோர் எவற்றிலெல்லாம் பயிற்சிபெற வேண்டும் என்பதை இயங்குதளம் சார்ந்து, பயன்பாட்டு மென்பொருள் சார்ந்து, இணையம் சார்ந்து என மூன்று வகையாகப் பகுத்துள்ளார்.

இவை மட்டுமின்றி விசைப்பலகை, குறியேற்றம், எழுத்துரு, தமிழைத் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருட்கள், தட்டச்சு செய்யும் முறை- இயங்குதளங்களில் இதற்கான பயிற்சி, பல்வேறு விசைப்பலகைகள், குறியேற்றமாற்றி, கணினி வழி அச்சு சார்ந்த சில அடிப்படைகள் என பல செய்திகளையும் எளிமையாக விளக்கியுள்ளது இரண்டாம் பகுதி.

நூலின் அடுத்த பகுதி இணையம் குறித்தும், உலாவி, தேடுபொறி, மின்னஞ்சல், வலைப்பூ, மின்னுாலகம், மின் நூல், ஒலி நூல், மின்னகராதி, மின்னிதழ், இணைய வானொலி –- தொலைக்காட்சி, மின்னரட்டை, மின் வணிகம், விக்கிபீடியா, பலகைக்கணினி -திறன்பேசி, மொபைல்பேசி சார்ந்த குறுஞ்செயலிகள் என, இணையத்தின் பல்வேறு பயன்பாடுகளை எளிமையாக எடுத்துரைத்துள்ளது.

நூலின் இறுதிப் பகுதி மின் கற்றல், இணையம் வழிக் கற்றல், கற்பித்தல், கற்க உதவும் இணையக் கல்விக் கழகம், இணையதளங்கள், கற்பித்தலுக்கான நிர்வாக ஒழுங்குமுறை, கணினித் தமிழ் ஆய்வு நிறுவனங்கள்- தன்னார்வ அமைப்புகள், கணினித் தமிழ் தொடர்பான விருதுகள் – பரிசுகள் – கணினி அச்சு இதழ்கள்- இணைய இதழ்கள், கணினித் தமிழ் நூல்கள்- பயிற்சிகள் முதலிய பல்வேறு தகவல்களைத் தொகுத்து உரைக்கிறது.

நூலின் பின்னிணைப்பாகக் கலைச்சொற்கள், சொற்சுருக்கம் -விரிவு, கோப்புகளின் விரிவாக்கங்கள், குறுக்குவிசைகள், துணை நூற்பட்டியல் இவை இணைக்கப்பட்டுள்ளன.

கணினி, இணையம் சார்ந்த தரவுகளோடு, இவை குறித்து அறிய விரும்புவோர் அறிய வேண்டிய அடிப்படைச் செய்திகளையும் வரிசைப்படுத்தியுள்ளது இந்நூலின் சிறப்பாகும்.

ஆங்கிலத்திலேயே கேட்டு, கேட்டுப் பழகிய பல சொற்களுக்கான தமிழ்ச் சொற்களையும் அவற்றை விளக்க அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொற்களையும் ஆசிரியர் பயன்படுத்திச் செல்வது நல்ல முயற்சி.

வளரும் அறிவியல் வேகத்திற்கு ஈடுகொடுத்து இதுபோன்ற பல அறிவியல் தமிழ் கருத்துகளைத் தமிழில் பகிர்ந்து கொள்ளவேண்டும் தமிழ் நூல்கள் உருவாக வேண்டும் எனும் நூலாசிரியரின் விருப்பம் போற்றுதற்குரியது.

-பன்னிருகை வடிவேலன்

நன்றி: தினமலர், 4/12/2016.

Leave a Reply

Your email address will not be published.