லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்

லஞ்சமும் சட்ட நடைமுறைகளும், க. விஜயகுமார், விஜயா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ.

லஞ்சம் எனும் அரக்கன்

இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னையாக பயமுறுத்துவது லஞ்சமும், ஊழலும்தான். உண்மையில் லஞ்சம் என்பது தீர்க்க முடியாத பிரச்னையா, இதற்குக் காரணம் அரசும், அரசு சார்ந்த நிர்வாக அமைப்புகள் மட்டும்தானா? மக்களுக்க இதில் எந்தவிதமான பங்கும் இல்லையா எனப் பல கேள்விகள் எழுகின்றன.

இப்படிப் பல கேள்விகளுக்கான விளக்கப் புத்தகமாக வெளிவந்துள்ளது க. விஜயகுமார் எழுதியிருக்கும் ‘லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்’ என்ற இந்தப் புத்தகம்.

லஞ்சம் என்றால் என்ன, அந்தக் குற்றத்தைச் செய்யாமல் தடுப்பது எப்படி, நடவடிக்கை எடுப்பது, புகார் மனு அளிப்பது எப்படி எனத் தெளிவாக, சிறு சிறு கட்டுரைகளாக அளித்திருக்கிறார் நூலாசிரியர்.

அரசு அலுவலகங்களில், சான்றிதழ், நலத்திட்டங்கள் ஆகியவற்றைப் பெற அதிகாரிகளை கவனிக்காமல் காரியம் நடக்காது என்ற நிலைதான் இன்றைய நடைமுறையில் உள்ளது. கல்வித்துறை, காவல்துறை, பதிவுத் துறை, நில அளவைத் துறை, நிதித்துறை எனப் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

லஞ்ச ஒழிப்பு சட்டங்களும், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டும், லஞ்சமும் ஊழலும் இந்தச் சட்டங்களால் அணைபோட்டு தடுக்க முடியாத பெருவெள்ளமாக பெருக்கெடுத்து வருகிறது. எங்கும், எதிலும் ஊழல் புகுந்து விளையாடுவதால் அது சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும் அபாயம் இருக்கிறது. இப்படிப்பட்ட லஞ்சத்தால் ஏற்படும் பொருளாதார சீரழிவால் பெருமளவில் பாதிக்கப்படுவோர் ஏழை எளியவர்களே.

‘லஞ்சம் என்ற குற்றத்தைத் தட்டிக் கேட்க வேண்டியதில் ஊடங்கங்களின் பணியும் முக்கியமானது’ என்கிறார் நூலாசிரியர். அவ்வகையில், தான் பணிபுரிந்த ‘தினமலர்’ நாளிதழ் எவ்வாறு லஞ்சத்தை ஒழிப்பதற்கான சமூகப் பணியில் முன்னணியில் நின்று, லஞ்ச விழிப்புணர்வு குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டது என்பதையும் விரிவாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில், லஞ்சம் தொடர்பான புகார் கொடுத்த பிறகு அதன் மீதான விசாரணை எப்படி நடைபெறுகிறது. சாட்சிகள் எப்படி கருதப்படுகின்றனர், லஞ்ச பணம் திரும்பக் கிடைக்குமா, லஞ்சம் வாங்கியவரின் மீதான நடவடிக்கைகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைக் குறித்த தகவல்கள் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

மேலும், லஞ்ச, ஊழல் குற்றங்களுக்கான தண்டனைகள், லஞ்ச ஒழிப்புத்துறை, சி.பி.ஐ., செயல்பாடுகள், முக்கிய முகவரிகள் என, ஒட்டுமொத்தமாக லஞ்சம் குறித்த விழிப்புணர்வையும், தெளிவையும் தருகிற முக்கியமான கையேடாக உள்ளது இந்தப் புத்தகம். சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூல் இது.

-பொன். வாசுதேவன்.

நன்றி: தினமலர், 27/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *