லட்சியப் பெண்டிர்

லட்சியப் பெண்டிர். தாயம்மாள் அறவாணன். தமிழ்க் கோட்டம்,  பக்.160, விலை ரூ.125.

பெண்ணினம் பயனுற வேண்டும் என்பதற்காக எழுதுகிற நூலாசிரியையின் புதிய, அரிய படைப்புதான் இந்நூல்.

அகத்திணைப் பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களே அதிகமாக இருப்பதற்கான காரணங்களை முள்ளியூர்ப்பூதியார் கட்டுரை விளக்குகிறது; தொல்காப்பியமும் மகளிரும்; காலந்தோறும் இலக்கிய மகளிரின் நிலைமை; பெருங்காப்பியங்கள் எல்லாம் ஏன் பெண்களையே முன்நிறுத்தி எழுதப்பட்டன என்பற்கான விளக்கம்; சங்க காலத்தில் பெண் கல்வி எவ்வாறு இருந்தது என்பதற்கான விளக்கம்; ஒüவையாரின் கல்வி ஒழுக்கத்தில் கூறப்பட்டுள்ள முதன்மையான கருத்துகள்; சங்க பெண்பாற் புலவர்களின் பாடல்களோடு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கங்காதேவியின் வீரச்செயல்களை ஒப்பிட்டுள்ளது; சீவகசிந்தாமணியில் 445 பாடல்களை இடைச்செருகலாகச் சேர்த்த ஜைனக் கவிதாயினியான கந்தியார் பற்றிய விரிவான தகவல்கள்; அறியப்படாத காரைமகள், சம்பூரணம், ஹா.கி.வாலம், அன்னம்மாள் ஆகிய பெண் கவிதாயினிகளின் கவிதைகள் திறனாய்வு; பெங்களூர் நாகரத்தினம் அம்மாளின் நடனம், இசைக்கலை புலமை பற்றிய விளக்கம்; இலங்கைத் தொழிலாளர்களின் விடுதலைக்குப் பாடுபட்டுக் கவிதைகள் புனைந்த கவிதாயினி கோ.நடேச மீனாட்சி ஒரு புரட்சிக் கவிஞர் என்பது; சுந்தரத்தம்மையாரின் “பெண்மாட்சி’ என்ற நூலை மீள்பார்வை செய்துள்ளது என, அறியப்படாத பல பெண் கவிதாயினிகளைப் பற்றிய அரிய தகவல்களை இந்நூல் கொண்டிருக்கிறது.

அவ்வை எவ்வாறு அம்மா ஆனார் என்பதற்கான விளக்கமும், “அம்மா’ பற்றி பல இலக்கியங்களிலிருந்து சான்றுகள் காட்டி மிக அற்புதமாக அலசி ஆராய்ந்திருக்கிறார் தாயம்மாள் அறவாணன். இந்த லட்சியப் பெண்டிர் மகளிர்க்கு மட்டுமல்ல, இலக்கிய இன்பம் சுவைப்போர் அனைவருக்கும் பயன்படும் ஓர் அரிய படைப்பு.

நன்றி: தினமணி, 17/7/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *