எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து
எம்.ஜி.ஆர். என்ற ஹிந்து, ம.வெங்கடேசன், கிழக்கு பதிப்பகம்
ம.வெங்கடேசனின் சமீபத்தைய புத்தகம் ‘எம்.ஜி.ஆர். என்கிற ஹிந்து’. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகம் முனைந்ததை ஒட்டி ஏற்பட்ட ஆய்வில் இப்புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார் ம.வெங்கடேசன்.
சில புத்தகங்கள் உணர்வுப் பூர்வமாக இருக்கும். சில புத்தகங்கள் வெறும் தகவல்களாக இருக்கும். இப்புத்தகம், ம.வெங்கடேசனின் மற்ற புத்தகங்களான ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’, ‘தலித்துகளுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி’ போன்ற புத்தகங்களைப் போலவே, மிகவும் விவரமாக தரவுகளுடன் எழுதப்பட்ட புத்தகம்.
ஹிந்துத்துவ அம்பேத்கர் என்ற பெயர் மட்டுமே வெளியான சூழலில் அப்புத்தகத்துக்கு பெரிய விமர்சனத்தையே எழுதி திக்குமுக்காட வைத்தவர்கள் எதிர்த்தரப்புக்காரர்கள். அத்தரப்பை இன்னும் ஒரு முறை பதில் சொல்லமுடியாக் கேள்விக்குள் வைத்திருக்கிறார் ம.வெங்கடேசன்.
எம்ஜிஆர் ஏன் ஹிந்து என்பதை அவரது பேட்டிகள், அவரைப் பற்றிப் பிறர் சொல்லும் கருத்துகள் மூலம் நிறுவுகிறார். அத்தோடு எப்படி திராவிடர் கழகம் வரலாற்றின் பக்கங்களில் எம்ஜிஆரை திட்டித் தீர்த்தது என்றும் அவர் எப்படி ஹிந்து ஆதரவாளராக இருக்கிறார் எனக் கட்டம் கட்டியது என்பதையும் ஆதாரத்துடன் பதிவு செய்கிறார்.
இன்று எம்ஜிஆரை சொந்தம் கொண்டாட திராவிடர் கழகத்துக்கு என்ன தகுதி உள்ளது என்பதுதான் புத்தகத்தின் ஒட்டுமொத்த கருத்துமே. கூடவே எப்படி ஹிந்து ஆதரவாளர்கள் அன்று எம்ஜிஆருடன் நின்றார்கள் என்பதையும் எம்ஜிஆர் அவர்களுடன் எப்படி இணைந்து சென்றார் என்பதையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
-ஹரன்பிரசன்னா.
நன்றி: அந்திமழை, ஜுன் 2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818