மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.200

மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி வரலாற்று பின்னணியுடன் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம் 26 வியப்பூட்டும் தலைப்புகளில் அமைந்துள்ளது. மர்மங்கள் புதைந்துள்ள மாமல்லபுரம் என துவங்குகிறது முதல் அத்தியாயம். இரண்டு பனை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஐந்து ரதம் பகுதியின் பழைய போட்டோ இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்து மர்ம முடிச்சுகளை விடுவிக்கும் வகையில், அடுக்கமைவு முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

நிரூபிக்கப்பட்ட வரலாற்று ஆதார செய்திகள் புத்தகத்தின் ஆன்மாவாக உள்ளன. அவை சிதறிவிடாமல் குழப்பமின்றி விவரிப்பு அமைந்துள்ளது. அத்தியாயங்களின் தலைப்பு புதிர் நிறைந்த கேள்விகளை உள்ளடக்கி உள்ளன. ‘பல்லவர்கள் தமிழர்களா… அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்’ என இரண்டாவது அத்தியாயம் துவங்குகிறது. இதற்கான விடை பல்வேறு வரலாற்று தரவுகளை உள்ளடக்கியுள்ளன.

மாமல்லபுரம் அடுத்த சல்லுவான்குப்பம் பகுதியில் புலிக்குகை அருகே, தற்போது கண்டறியப்பட்டுள்ள முருகன் கோவில் பற்றி முழு விபரங்களை கல்வெட்டு ஆதாரத்துடன் தந்துள்ளார் நுாலாசிரியர். இந்த கோவில், சங்க காலத்தில் கட்டப்பட்டதாக உள்ள தகவல் வியப்பூட்டுகிறது. கோவிலில் அமைந்துள்ள கல்லில் செதுக்கிய வேல் பற்றிய செய்தியும், படமும் தமிழக வரலாற்று காலத்தை பின்நோக்கி அழைத்து செல்கிறது.

மாமல்லபுரம் சிற்பத் தொகுதிகளின் பின்னணி பற்றிய தகவல்களை தேடித் தேடி பதிவு செய்துள்ளார் ஆசிரியர். குடைவரைகள், கல்வெட்டுகள், சிற்பங்கள் தரும் நேரடி செய்திகள், அவை உருவான பின்னணி என களஞ்சியமாக அமைத்துள்ளார்.

சிற்பத் தொகுதி அமைந்துள்ள மலை பற்றி முழு விபரங்களும் புத்தகத்தில் உள்ளன. மலையின் ஒரு பகுதியில், நீச்சல் குளம் போன்ற அமைப்பு பற்றிய செய்தி புதிதாக உள்ளது. சிற்பங்களின் தனித்தன்மை பற்றிய நுணுக்கமான தகவல்கள் சுவையூட்டுகின்றன.

அர்ச்சுனன் தபசு, பகீரதன் தபசு, பூமிக்கு கங்கையின் வருகை என பல பெயர்களால் அழைக்கப்படும் மாமல்லபுரம் பெரிய பாறை சிற்பத் தொகுதியைப் போல், உலகில் சிறந்த கலைப்படைப்பை வேறு எங்கும் பார்க்க முடியாது என ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்.

இதிகாசங்கள், புராணங்கள், சங்க இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் வர்ணனைகள், பாறை சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன என வியந்து காட்டுகிறார்.

புத்தகம் முழுதும் பொருத்தமான போட்டோக்கள் உரிய பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் வாசிப்புடன் காட்சியும் கலந்து, புரிதலை எளிதாக்குகிறது. நேரில் கதை சொல்வது போன்ற வாசிப்பு அனுபவத்தை தருகிறது. அரிய வரலாற்றை சுவாரசியம் குன்றாமல் காட்சிப்படுத்தியுள்ள நுால்.

– மலர்

நன்றி: தினமலர், 6/2/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.