முதல் குரல்

முதல் குரல், பாரதி பாஸ்கர்,கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.130.

பலவகையான காய்கறிகளைக் கலந்து செய்த ருசியான – காரமான அவியல் மாதிரியான ஒரு தொகுப்பு இந்நூல். ஆம். ஒன்பது கட்டுரைகள், ஒன்பது கதைகள், எட்டு பதிவுகள் ஆகிய மூன்றின் கலவை.

முதல் பெண் பேச்சாளர் யார்? சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த ஐஸ் ஹவுஸ் எப்படி விவேகானந்தர் இல்லமாக மாற்றப்பட்டது? மதுரையை விட்டு சென்னைக்குத் தனியாக வந்த எம்.எஸ்.சுப்புலெட்சுமியின் வாழ்க்கைப் பாதை மாறிய விதம் எப்படி? என்பன போன்ற கட்டுரைகள், நல்ல தகவல்கள். சமீபத்தில் பெண்களை இழிவுபடுத்துவது போல பாட்டு எழுதிய – அப்பாட்டுக்கு இசை அமைத்த இருவரையும் “நீங்க பாடுங்க தம்பிங்களா…’’ என்று கூறிவிட்டு, அவர்களைக் கடுமையாகக் கண்டித்திருப்பது; “லெகின்ஸ்’ என்ற உடையின் நதிமூலம், ரிஷிமூலத்தை விளக்கியுள்ளது காலத்திற்கேற்ற பதிவுகள்.

“அப்பா எனும் வில்லன்’’ கதை மனதைத் தொடுகிறது. சில அலுவலகங்களில் பெண்களைச் சீரழிக்க இப்படியும் சில நரிகள் இருக்கின்றன என்ற உண்மையைப் படம் பிடித்துள்ளது “நரிகள்’’ கதை. “மெய்த்திருப்பதம் மேவு’’ கதை இலக்கியச் செறிவுடன் கூடியது. மற்ற கதைகளும் சிந்தனைக்குரியவை.

நேரம் நம் கையில், வெற்றிக்கான முதல் டிப்ஸ், அலுவலகத்தில் பெண்கள் அழலாமா? போன்ற பதிவுகள் (எட்டு) அனைத்துமே பயனுள்ளவை. இரக்கம், பரிவு, நகைச்சுவை, கேலி, கிண்டல், பாசம், இலக்கியம், பக்தி எல்லாம் வழக்கம்போலவே நூலில் வெளிப்படுகின்றன.

பல உவமைகளைக் கையாண்டு தாம் சொல்ல வருவதை நகைச்சுவையாக – சுவாரசியமாகச் சொல்வதும், நிசர்சனமான உண்மைகளை எதார்த்தமாக எழுதிக் குரல் கொடுப்பதும்தான் இந்நூலின் தரத்தை உயர்த்துகிறது.

நன்றி: தினமணி, 8/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *