முதல் தலைமுறை மனிதர்கள்
முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், நிலவொளி பதிப்பகம், விலை 200ரூ.
முதல் தலைமுறை மனிதர்களிடமிருந்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள, ஏராளமான தகவல்களைத் தேடி அலைந்து சேகரித்து இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.
தமிழகத்தின் தவிர்க்க இயலாத சக்திகளாகத் திகழ்ந்த 30 இஸ்லாமிய ஆளுமைகளின் வரலாறு இந்நூலில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் போராட்டம், அரசியல், கல்வி, சமூக சேவை, சமுதாயச் சேவை… என்று பல தளங்களில் இந்த முதல் தலைமுறையினரின் பங்களிப்புகளுடன், அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
தவிர, அன்றைய தமிழக அரசியல் மற்றும் சமூகச் சூழல்களையும் ஆசிரியர் படம் பிடித்துக் காட்டியுள்ளது பாராட்டத்தக்கது. சென்னை, தி.நகர், உஸ்மான் சாலைக்கு இப்பெயர் எப்படி வந்தது, அவர் யார், அப்படி என்ன சாதித்தார்… என்ற பல கேள்விகளுக்கு இந்நூலில் விடைகள் அறியலாம்.
அதேபோல் உத்தமபாளையம் பகுதியில் கருத்த இராவுத்தர் குறித்து, அனைத்து தரப்பு மக்களிடமும் உயர்வான மதிப்பீடு உண்டு. காரணம், அப்பகுதி ஏழை மக்களுக்கான சுகாதாரத்திற்கும், கல்விக்கும் அவர் தனது சொத்துக்களை வாரி வழங்கியுள்ளார்.
திருக்குர்ஆனுக்கு முதல்முதலாக தமிழ் மொழிபெயர்ப்பு நூலை சுமார் 23 ஆண்டுகள் உழைத்து, முதல் தமிழ் பதிப்பை உருவாக்கிய ஆ.கர்.அப்துல் ஹமீது பாக்கவி, சுதந்திரப் போராட்டத்திலும், காந்திஜியின் கதர் இயக்க கொள்கையிலும் ஆற்றிய சேவைகளையும் இந்நூல் கூறுகிறது.
இப்படி 30 ஆளுமைகளின் விதவிதமான சேவைகள் படிக்க ஆவலைத் தூண்டும் வகையில் எளிய தமிழ் நடையில் விளக்கப்பட்டுள்ளன.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 10/5/2017.