முதல் விடுதலை வீரர் பூலித்தேவர்

முதல் விடுதலை வீரர் பூலித்தேவர், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம்,  காவ்யா, பக். 285, விலை ரூ.280.

‘ஆங்கிலேயரை மட்டுமல்லாது, நாயக்கர்களையும், நவாபுகளையும் எதிர்த்துப் போராடியவர் பூலித் தேவர்’. 1715 இல் பிறந்தவரான பூலித்தேவர் 1750 இல் இன்னிசு துரையுடன் போரிட்டார். அதற்குப் பின் 1767 இல் நடந்த போரில் அவர் மரணமடைவது வரை தொடர்ந்து அந்நிய ஆதிக்கங்களுக்கு எதிராகப் போரிட்டார். முதல் சுதந்திரப் போர் வீரராக அவர் திகழ்ந்தார். முதல் சுதந்திரப் போர் வீரர் பூலித்தேவரா, கட்டபொம்மனா என்ற கேள்விக்கு இந்நூல் விடையளிக்கிறது.

இந்நூலில் துர்க்காதாஸ் எஸ்.கே.ஸ்வாமி எழுதிய தமிழ்வீரன் பூலித்தேவன் என்ற நூலும், பேராசிரியர் ந.சஞ்சீவி எழுதிய வீரத்தலைவர் பூலித்தேவர் என்ற நூலும், புலியூர் கேசிகன் எழுதிய புலித்தேவனா? பூலித்தேவனா? என்ற நூலும் இடம் பெற்றுள்ளன.

வலுவான பேரரசுகள் இல்லாத சூழ்நிலையில் நாயக்கர்கள், நவாபுகள், ஆங்கிலேயர்களின் ஆட்சி நடைபெற்று வந்த காலத்தில் பூலித்தேவன், அநியாய வரி வசூலிப்புக்கு எதிராகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போரிட்ட வரலாறு, இந்நூலில் சிறப்பாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பூலித் தேவனா, புலித்தேவனா என்ற சொல்லாராய்ச்சியும் செய்யப்பட்டுள்ளது.

1700 – 1800 காலகட்டத்தின் தமிழக வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்நூல் உதவும்.

நன்றி: தினமணி, 25/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *