நாளும் ஒரு நாலாயிரம்

நாளும் ஒரு நாலாயிரம், தொகுப்பு: மாருதிதாசன், நர்மதா பதிப்பகம், பக்.400, விலை ரூ.200.

திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு பெருமாளின் கல்யாண குணங்களையும், அவன் உறையும் திருப்பதிகளான திவ்ய தேசங்களைப் புகழ்ந்து பாடியும், அத்திவ்ய தேசங்களை மங்களாசாசனம் (பாசுரம் இயற்றி) செய்து பாடியும் வழிபட்டவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.

அன்பு, பக்தி, சரணாகதி, திருமந்திரம், திவ்யம் முதலிய வைணவத்தின் அடிப்படைத் தத்துவங்களை, தாம் அருளிச்செய்த பாசுரங்களில் இவர்கள் வெளிப்படுத்தினர். புராண, இதிகாச நிகழ்வுகளையும், பெருமாளின் பத்து அவதாரங்களையும், நீதிநெறிக் கருத்துகளையும், வீடுபேற்றுக்கான வழியையும் அப்பாசுரங்களின் மூலம் அருளிச் செய்தனர்.

திருக்கோயில் சந்நிதிகளில் நாள்தோறும் காலையில் திருப்பல்லாண்டு தொடங்கி, பூச்சூட்டல், காப்பிடல், சென்னியோங்கு, அமலனாதிப் பிரான், கண்ணிநுண் சிறுதாம்பு முதலிய ஆழ்வார்களின் முக்கியமான பாசுரங்களை அனுசரித்துச் சாத்துமுறை செய்யும்படி ஓர் அற்புதமான திட்டம் நித்யாநுஸந்தாநம் என்ற பெயரில் ஸ்ரீமந் நாதமுனிகளால் வகுக்கப்பட்டுப் பெரும்பாலான சந்நிதிகளில் இன்றும் நடைபெற்று வருகின்றது. அத்தகைய பாராயணத்துக்கு உரிய வகையில், 365 நாள்களும் பாராயணம் செய்ய 365 பாசுரங்களும், அப்பாசுரங்களுக்கான எளிய தெளிவுரையும் இந்நூலில் தரப்பட்டுள்ளதுடன், நட்சத்திரக் குறியிடப்பட்ட பாசுரங்களை சிறப்புக் கருதி இரு முறை சேவிக்க வேண்டும் என்கிற குறிப்பும் தரப்பட்டுள்ளது சிறப்பு.

பெருமாள் திருவடியின் பெருமை, எமதூதர்களால் வரும் தண்டனையிலிருந்து தப்புவதற்கான வழி, நரகம் புகாமல் இருப்பதற்கான வழி, தளர்ச்சியுள்ள காலத்தில் காப்பாற்றுபவர் யார், ஐம்புலன்களை அடக்கும் வழி என்ன, துன்பங்களைத் தரவல்ல கொடிய வினைகளைத் தீர்க்கும் ஆற்றல் யாருக்கு உண்டு, அடைக்கலம் புகத்தக்க இடம் எது? எம்பெருமான் எங்கிருக்கிறான், மனம் மயக்கம் கொள்ளாதிருக்க என்ன வழி என்பன போன்ற பல வினாக்களுக்கான விடைகளை இதிலுள்ள பாசுரங்கள் தருகின்றன. தினந்தோறும் பாராயணம் செய்தால் திருமாலின் திருவருளைப் பெறுவது உறுதி!

நன்றி: தினமணி, 11/11/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000006399.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *