நிழல்களின் உரையாடல்

நிழல்களின் உரையாடல்; ஆசிரியர்,மார்த்தா த்ராபா, தமிழில்: அமரந்த்தா, காலக்குறி – யாழ் வெளியீடு, விலை: ரூ.250.

ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒரு வீட்டில் சந்தித்துக்கொள்ளும் இரண்டு பெண்களின் உரையாடல்தான் ‘நிழல்களின் உரையாடல்’ நாவல். உருகுவே நாட்டில் மோன்தேவீதேயோ நகரத்தில் புகழ்பெற்ற முன்னாள் நாடக நடிகை ஐரீனுக்கும், அவளைவிட இளையவளுமான தொலோரெஸுக்கும் நடக்கும் உரையாடல் அது. இரண்டு பெண்களுக்குள் நடக்கும் உரையாடல், இரண்டு பெண்களும் உரையாடலின் இடையில் தங்கள் மனதில் அசைபோடும் எண்ணங்கள், கதையைக் கூறும் மூன்றாவது குரல் என்று மாறி மாறி வெளிப்பட்டு, வாசகரின் கவனத்தைக் கடைசி வரை கோரும் தீவிரமான படைப்பு இது.

ஐரீன், தொலோரெஸ் இருவருமே வேறுவேறு விதமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தவர்கள். ஐரீன் அரசியல் சூழலிலிருந்து விலகியிருக்க முயல்பவள். தொலோரெஸ் தலைமறைவு அரசியல் செயல்பாட்டாளராக இருப்பவள். அவள் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வயிற்றில் வளரும் சிசுவை போலீஸாரின் வன்முறைக்குப் பலியாகக் கொடுத்தவள். ஒரு கவிதாயினியும் ஒரு நாடக நடிகையும் பேசும் உரையாடல் என்பதால், பேச்சு கனமாகவும் வாசகர்கள் சுயத்தையும் பரிசீலிப்பதாகவும் ஆழமான உண்மைகளை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

அரசும் அதிகாரமும் வலியுறுத்தும் தணிக்கைக்கு, கருத்துரிமைக்கு எதிராகச் செயல்படுத்தும் அச்சுறுத்தலுக்கு, கொடுங்கோன்மைக்கு எதிராகப் பேசுவதன் வழியாக, நினைவுறுத்துவதன் வழியாகப் போராடுபவர்களாகப் பெண்கள் இந்த நாவலில் உள்ளனர். காணாமல்போன தங்களின் மகன்களையும் மகள்களையும் எங்கேயென்று கோரி ஆயிரக்கணக்கான அன்னையர், தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களோடு மே சதுக்கத்தில் கூடிய தென்அமெரிக்க வரலாற்றையே உலுக்கிய வியாழக்கிழமை பேரணியும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன.

இங்கே வரலாறும் புனைவும் சேர்கின்றன. இந்த நாவலின் கதைக்களம் தொடர்பிலான பின்னணியும் குறிப்புகளும் தரப்பட்டுள்ளது இந்த நாவலை மேலும் நெருங்குவதற்கான வாய்ப்பு. லத்தீன் அமெரிக்கப் படைப்புகளைக் கூரிய அரசியல் பிரக்ஞையுடன் மொழிபெயர்த்து வரும் அமரந்த்தாவின் முக்கியமான பங்களிப்பு இந்த நூல்.

நன்றி.தமிழ் இந்து. 11.07.2020.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *