ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு – சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை , ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்,  தமிழில் – அனிதா பொன்னீலன், புலம் வெளியீடு,  பக்.208, விலை  ரூ. 170.

போர்க்களச் சூழலில், 13 வயதுச் சிறுமி எழுதிய நாட்குறிப்புகள் தாம் இந்நூல். அவர், ஸ்லெட்டா ஃபிலிப்போவிக்.

யுகோஸ்லாவியாவிலிருந்து விடுதலையடைந்த போஸ்னியா, ஹெர்ஸகோவினா என்ற சின்னஞ்சிறிய நாடுகள் எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என விரும்பி செர்பியர்கள் நடத்திய போர்தான் நாட்குறிப்பின் அடிப்படை.

1991 முதல் 1993 வரை நடந்த போரில் ஏற்பட்ட துயர அனுபவங்கள்தாம் ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு. சேமப் படையினர் நுழைந்துவிட்டார்கள் ஏன்? எதற்காக? எனக்கு அரசியல் புரியாதோ? எனத் தோன்றுவதாகப் பதிவிடுகிறார் ஸ்லெட்டா.

இடையிடையே என் பிரியமான நாட்குறிப்பே, அன்புள்ள மிம்மி, என் மீது உனக்குக் கோபமில்லை தானே… என்றெல்லாமும் செல்லமாக உரையாடுகிறார். இரவுகளை எலிகளுடன் கூடிய நிலவறையில் கழித்ததும், மின்சாரமில்லாமல் உறங்கியதும், சாப்பிடுவதற்கு ரொட்டியில்லாமல் போனதும், பூங்காவில் விழுந்த குண்டு ஓடி விளையாடிய தோழிகளைப் பலியாக்கியதும் என போர்க் காட்சிகளைக் கண் முன் நிறுத்துகிறார் ஸ்லெட்டா.

குழந்தைகளை வகுப்பறைகளில் இருந்து பதுங்கு குழிகளுக்குள் அனுப்புகிறது போர் என்ற ஸ்லெட்டாவின் பதிவு அதிரச் செய்கிறது. ஸ்லெட்டா வீட்டின் அருகே இருந்த அஞ்சலகம், அவர் பிறந்த மருத்துவமனை, அவர் படித்த பள்ளிக்கூடம், அவர்களின் கிராமத்து வீடு எல்லாமும் குண்டு வீச்சால் எரிந்தக் காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறார்.

இடையிடையே அவர் படித்த புத்தகங்கள், வீட்டுக்குப் புதிய விருந்தினராக வந்த பூனைக்குட்டி, உலக நாடுகள் வழங்கிய நிவாரண உணவுப் பொட்டலங்கள் போன்ற பதிவுகளும் உள்ளன.

ஸ்லெட்டாவின் நாட்குறிப்பைத் தமிழில் பெயர்த்திருப்பவர், மூத்த எழுத்தாளர் பொன்னீலனின் மகள் அனிதா பொன்னீலன். இது அவரது முதல் படைப்பு. பக்கங்களைத் தொடர்ந்து நகர்த்தும்படியான ஆர்வத்தைக் கூட்டுவது அருமை.

நன்றி: தினமணி, 6/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *