கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள்
கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 911, விலை ரூ.900.
கவி.கா.மு.ஷெரீப் எழுத்தின் மீது கொண்ட தாகத்தால் “ஒளி’, “தமிழ் முழக்கம்’, “சாட்டை’, “திங்கள்’ ஆகிய இதழ்களை அவர் நடத்தினார். அவற்றில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
“தமிழரின் நெறி”, “ஒளி தலையங்கங்கள்’, “தமிழரசுக் கழகம் ஏன் வந்தது?’, “இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’, “இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?’, “பத்ர் போரின் விளைவுகள்’, “வள்ளல் சீதக்காதி வரலாறு’ ஆகியவற்றுடன் புதுவை வானொலியில் தொடர்ந்து இவர் நிகழ்த்திய சீறாப்புராணச் சொற்பொழிவுகளும் இதில் அடக்கம்.
“தமிழரசுக் கழகம் ஏன் வந்தது?’ என்ற 70 பக்க கட்டுரையில், தமிழரசுக் கழகத்துக்கு எதிராகப் பரப்பப்பட்ட கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழருக்காகப் பேச, தமிழ் மொழிக்காகப் பாடுபட, தமிழ்க் கலாசாரத்தைப் பரப்ப உருவான கட்சி தமிழரசுக் கழகம் என்கிறார்.
“இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?’ கட்டுரையில், இந்து – முஸ்லிம் பகைமை தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றையும் தக்க சான்றுகளோடு தொட்டுக் காட்டியிருக்கிறார். “பத்ர் போரின் விளைவுகள்’ கட்டுரையில் நபிகள் நாயகம் (ஸல்) மதீனாவில் வாழ்ந்த 11 ஆண்டு காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களை நெறிப்படுத்தி உணவு, உடை, உறை, உணர்வு, ஓதல் உட்பட யாவற்றிலுமே ஒரு நெறிப்பட்டவர்களாகப் பக்குவப்படுத்திக் காட்டிய அற்புதத்தை விளக்கியிருக்கிறார்.
“இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’ தலைப்பிலான கட்டுரை அனைவரது சிந்தனைக்கும் உரியது. “ஜீவகாருண்யத்தை வலியுறுத்தும் இஸ்லாம் புலால் உண்பதை அனுமதிக்கிறதே, அது எப்படி?’ என்கிற கேள்விக்கு பத்து தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகளாகத் தம் வாதங்களை அவர் எடுத்து வைத்திருக்கும் திறமை படிப்போரை வியப்பில் ஆழ்த்தும். இவரின் பெரும்பாலான கட்டுரைகள் இஸ்லாமியர் அல்லாதவரை இணக்கப்படுத்தி அவர்களுக்குள் சுகமான – சுமூகமான உறவு வளரச் செய்யவே எழுதப்பட்டவையாக அமைந்துள்ளன.
நன்றி: தினமணி, 13/6/2016.