உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு
உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு, மு.முனீஸ்மூர்த்தி, இராசகுணா பதிப்பகம், பக். 136, விலை 100ரூ.
தொல்காப்பியர், செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாக “நோக்கு‘’ என்பதைச் செய்யுளியலில் குறிப்பிடுகிறார். சில நூற்பாக்களில் இந்த “நோக்கை’‘க் காணமுடிகிறது (எ.கா. “நோக்கே பாவே அளவியல்’‘, “நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே’‘). இந்த நோக்கு குறித்து பல ஐயங்களை எழுப்பி, அதற்கான விடையும் தரப்பட்டுள்ளது.
இதற்கு முன் நோக்கு குறித்து ஆராய்ந்த அறிஞர்கள் பெருமக்களின் பட்டியல், இந்நோக்கு குறித்து நச்சினார்க்கினியர், பேராசிரியர், இளம்பூரணர், தமிழண்ணல், செ.வை.சண்முகம் போன்றோரின் புரிதல்கள் போன்றவையும் தரப்பட்டுள்ளன.
கலித்தொகைக்குத் “துறைக்குறிப்பு‘’ குறித்த மீள் வாசிப்பும் (மீள்பார்வை), சமுக வரலாற்று நோக்கில் கலித்தொகை உரைகளும் ஆராயப்பட்டுள்ளன. தொல்காப்பியர் சுட்டும் எழுதிணைகளுள் ஒன்றான “ஒருதலைக் காதல் (காமம்)‘’ என்று சொல்லப்படும் “கைக்கிளை’‘ பற்றிய உரையாசிரியர்களின் புரிதல்களுடனும் மீள் வாசிப்புடனும், முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள கைக்கிளை மரபும் ஆராயப்பட்டுள்ளது.
முல்லைப்பாட்டுக்கு இரு வேறுபட்ட உரைகள் உள்ளமை; “சபாபதி நாவலரும் சி.வை.தாமோதரம் பிள்ளையும் வழங்கிய இலக்கியக் கொடை’‘ என்ற தலைப்பில், “தமிழ்‘’ எனும் சொல்லுக்கான பெயர்க் காரணங்களை சி.வை.தா. (வீரசோழியப் பதிப்புரையில்) வழங்கிய கருத்துக்கு மறுப்புரை தெரிவித்துக் கண்டனம் எழுப்பிய சபாபதி நாவலரின் கோபத்தால் விளைந்த பயன் என்ன என்பது ஆகியவை சுவாரசியமாகச் சொல்லப்பட்டுள்ளன.
மேலும், இறையனார் அகப்பொருள் பதிப்பின் பின்புலம், விவாதங்கள், ஐயங்கள், ஆறுமுக நாவலர் ஆசாரக் கோவையைப் பதிப்பிக்க முன்வராததற்கான பின்னணி என்ன என்பன போன்றவை அடங்கியுள்ள இந்நூல், இலக்கிய சர்ச்சைக்குரிய தகவல்களைக் கொண்டதாகவும், சுவாரசியமான வரலாற்றுப் பதிவாகவும் உள்ளது.
நன்றி: தினமணி, 14/8/2016.