வங்கமொழிச் சிறுகதைகள்,

வங்கமொழிச் சிறுகதைகள், தொகுப்பு 3, தொகுப்பாசிரியர் அஷ்ருகுமார் சிக்தார், தமிழில் பெ. பானுமதி, சாகித்திய அகாதெமி, பக். 576, விலை 400ரூ.

மொத்தம் 28 சிறுகதைகள். மேற்கு வங்கத்தின் ரத்தமும் சதையுமாக! இந்தக் கதைகள் வங்காளிகளின் வாழ்க்கையை விரிவாகவும் ஆழமுமாகக் காட்டுகிறது.

மேற்கு வங்க மாநிலம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாகவே இருந்துள்ளது. இங்கே மாவோயிஸ்டுகளும் இருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகளுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். இங்கும் நகரம் இருக்கிறது. படிப்பறிவில்லாத கிராம மக்களும் இருக்கிறார்கள். இந்தத் தொகுப்பின் சில கதைகள் பொதுத்தன்மை கொண்டிருந்தாலும் அரசியல் சார்ந்த கதைகளின் அதீதத்தன்மை, விமர்சனம், கேலியைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், மேற்கு வங்க அரசியலைப் பற்றி அறிந்திராமல் முடியாது. ‘சவஊர்வலம்’, ‘சுஷ்மா’ இரு கதைகளும் அப்படியானவை.

‘பாலுட்டிகள்’, ‘அதஸியின் ஒரு மத்தியானம்’, ‘தங்க கடியாரம்’ ஆகியவை பெண்களின் பிரச்னைகளை மையப்படுத்துபவை. இதில்பிரபுல்ல ராய் எழுதிய ‘ஏழாவது கல்யாணம்’ கதை பெண்ணின் தியாக உச்சம்.

இந்தத் தொகுப்பின் மிகவும் மாறுபட்ட கதை பிமல் கர் எழுதிய ‘பெற்றவள்’. பிணத்தை வைத்துக்கொண்டு ஐந்து பிள்ளைகளும் அவளுடைய ஆவிக்கு என்ன கொடுத்து அனுப்புவது என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் தன் தாய் தனக்கு தர இயலாதவற்றை அவளுக்குக் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறார்கள். தங்களுக்குக் கிடைக்காமல் போனது என்பதை அவர்களது தனிப்பட்ட வாழ்கையின் துயரத்தோடு மனதில் அடக்கி வைத்த உணர்வை வெளிப்படுத்தும்விதம், உளவியல் சார்ந்தது.

நன்றி: தினமணி, 21/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *