சப்தமில்லா சப்தம்
சப்தமில்லா சப்தம் (ஜென் கதைகள் குறித்த உரைகள்), ஓஷோ, தமிழில் சிவதர்ஷிணி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ.
ஐந்து அற்புதமான ஜென் கதைகளின் மூலம் வெளிப்படும் ஓஷோவின் வாக்குகளே சப்தமில்லாமல் நம் இதயத்தை ஊடுருவிச் சென்று பலவித சப்தங்களை நம்முள் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.
‘மனித அனுபவத்தில் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையிலான பாசம் கருணைக்கு நெருக்கமானது. மக்கள் அதை அன்பு என்கிறார்கள். அதை அப்படி அழைக்கலாகாது. அன்பைவிடவும் அது கருணைக்கு நெருக்கமானதாகக் காணப்படுகிறது. கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் தாயாகவே இருக்கார், தந்தையாக இருந்திட முடியாது.”
“மனம் பேசிக்கொண்டே இருக்கிறது. அந்தப பேச்சு அதற்கு உயிரளிக்கிறது. பேச்சு இல்லாது போனால் மனம் தொடர்ந்து அங்கு குடியிருக்க இயலாது. எனவே மனதின் பிடிப்புகளைக் களந்து எறியுங்கள். இதுவே உள்முகப் பேச்சை நிறுத்தும் வழி.
‘கடவுள் என்பது சரணாகதிக்கான ஒரு மாற்றுப் பொருள். ஏதாவது ஓர் அடையாளப் பொருள் இல்லாவிட்டால், உங்களால் சரணாகதி செய்ய இயலாது. கடவுள் என்ற ஒன்றை ஏற்படுத்தினால் உங்களால் சரணாகதி செய்ய முடிகிறது. வெறுமனே சரணாகதி செய்யுங்கள் என்று புத்த மதம் கூறுகிறது. காரணம், அந்த மதத்தில் கடவுள் இல்லை”.
இவ்வாறு பல தத்துவ முத்துக்களை சப்தமில்லாமல் பொழியும் ஓஷோ, அரசியல்வாதிகள் பற்றி பல உண்மைகளையும் புட்டுப் புட்டு வைத்துள்ளார். யார் படிக்கிறார்களோ, இல்லையோ, இன்றைய அரசியல்வாதிகள் படிக்கவில்லையென்றாலும் கட்டாயம் வாக்காளர்கள் படித்தறிய வேண்டும்!
நன்றி: தினமணி, 21/3/2016.