1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கா. அப்பாத்துரையார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 352, விலை 200ரூ.
தமிழினத்தின் இணையில்லாப் பெருமையை, பண்பாட்டை, வரலாற்றை, இலக்கியப் பங்களிப்பை எடுத்துரைக்கிறது இந்நூல்.
தமிழகத்தின் நிலஇயல் பிரவுகள், வெளிநாட்டு வாணிகம், தமிழ்க்கிளை இனங்களும் கிளைகளும்,தமிழ்க் கவிஞர்களும் கவிதைகளும் என 16 தலைப்புகளிலான கட்டுரைகள் உள்ளன.
கி.பி. 50க்கும் – கி.பி.150க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்ட மூவேந்தர்களையும், அவர்களில் கரிகாற்பெருவளவன், கிள்ளிவளவன், நெடுஞ்செழியன், பெருஞ்சேரல் இரும்பொறை உள்ளிட்டோரையும் குறித்துப் பேசுகின்றன, சேரர், பாண்டியர், சோழர் என்ற தலைப்பிலான மூன்று கட்டுரைகள்.
‘சமூக வாழ்வு கட்டுரை, அந்நாளைய தமிழகத்தில் நிலவிய ஆட்சி முறைமை, தீர்வை, சுங்கவரி முறைகள், களவியல் வாழ்க்கை, கலைகள் போன்றவை பற்றி வியக்கத்தக்க செய்திகளை விரிவாகச் சொல்கிறது. சிலப்பதிகாரக் கதையும், மணிமேகலைக் கதையும் முழுமையாகவும் எளிய நடையிலும் இடம்பெற்றுள்ளது சிறப்பு.
மேலும், ஆறுவகை மெய்விளக்கக் கோட்பாடுகள், சமய வாழ்வு ஆகியவற்றை விளக்கும் கட்டுரைகளும் ‘திருவள்ளுவர் குறள்’ கட்டுரையும் கூடுதல் சுவை. வி.கனகசபை என்பவரால் எழுதப்பட்ட ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது. ஆனால், பன்மொழிப் புலவரின் நடையழகால், தமிழிலேயே எழுதப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது.
நன்றி: தினமணி, 21/3/2016.