ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம், எஸ். நீலகண்டன், காலச்சுவடு, நாகர்கோவில், பக். 432, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-505-3.html
உலக அளவில் பொருளாதாரச் சிந்தனைகள் எவ்வாறு, வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை விளக்கும் நூல். ஆடம் ஸ்மித், ஜெரமி பென்தம், ஜீன்பாப்டிஸ்டி ஸே, டேவிட் ரிக்கார்டோ, மால்தஸ், ஜான் ஸ்டூவர்ட் மில், கார்ல் மார்க்ஸ் போன்ற சிந்தனையாளர்களின் பொருளாதாரக் கெள்கைகளை விவரிக்கும் நூல். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆடம் ஸ்மித் 1776இல் எழுதிய நாடுகளின் செல்வம் என்ற நூலில் விலைகள் அல்லது பொருள்களின் மதிப்பு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை விளக்குகிறார். இந்தியாவில் தங்கத்தையும், வெள்ளியையும் புதைத்து வைக்கும் வழக்கம் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று ஆடம் ஸ்மித் அந்தக் காலத்திலேயே கூறியுள்ளது வியப்பளிக்கிறது. இங்கிலாந்தில் பிறந்த டேவிட் ரிக்கார்டோ உழைப்புதான் பொருள்களுக்கு மதிப்பை உருவாக்குகிறது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால் அந்த மதிப்பு உழைப்பவர்களுக்குச் சேர வேண்டும் என்று அவர் சொல்லவில்லை என்கிறார் இந்நூல் ஆசிரியர். தனது மக்கள் தொகைக் கோட்பாட்டின் மூலம் புகழ் பெற்றவர் தாமஸ் ராபர்ட் மால்தஸ். பொருள் உற்பத்தி 1,2,3,4,5 என்ற விகிதத்தில் பெருகும்போது மக்கள் தொகை 1,2,4,8,16,32 என்ற விகிதத்தில் பெருகுகிறது என்றும், அதன் மூலம் வறுமைதான் தோன்றும் என்ற கருத்தை வெளியிட்டவர் மால்தஸ்.எனவே உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். இந்தக் கோட்பாட்டால் உலகம் முழுவதும் ஆதரவையும் எதிர்ப்பையும் மால்தஸ் சம்பாதித்தார். பொதுவுடமைக் கொள்கையை உருவாக்கிய கார்ல் மார்கஸ், மனிதன் ஒரு பொருளைத் தயாரிக்க செலவழித்த உழைப்புக்குச் சக்திக்குச் சமமான கூலி அவனுக்குக் கொடுக்கப்படுவதில்லை. அதுவே உபரி மதிப்பு. இந்த உபரி மதிப்பு வருங்கால மூலதனமாக உருமாற்றம் பெறுகிறது என்கிறார். முதலாளிய சமூகத்தில் உற்பத்தி உறவு, ஒரு கட்டத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக மாறிவிடுகிறது. அதன் விளைவாக முதலாளிய உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவின் அழிவு தவிர்க்க முடியாதது என்கிறார் கார்ல் மார்க்ஸ். இவ்வாறு கடந்த காலத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல பொருளாதாரச் சிந்தனைகளை அவை வளர்ந்த விதத்தை இந்நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய உலகமய காலப் பொருளாதாரப் போக்குகளைப் புரிந்து கொள்ளவும் இந்நூல் உதவும் என்பது உறுதி. குறிப்பிடத்தக்க சிறந்த நூல். நன்றி: தினமணி, 5/11/2012.