ஆமுக்த மால்யத
ஆமுக்த மால்யத (சூடிக்கொடுத்தவள்), தமிழில் எளிய உரை எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் வெளியீடு, சென்னை, பக். 352, விலை 200ரூ. தெலுங்கு மொழியின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான ஆமுக்த மால்யத கிருஷ்ணதேவராயரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது. விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரும் யமுனாச்சாரியரான ஆளவந்தாரும் விஷ்ணுவே பரம்பொருள் என்று உலகிற்கு உணர்த்தி வாழ்ந்துகாட்டியவர்கள். அவ்விருவரது வாழ்க்கையின் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள், கோதையாகிய ஆண்டாளின் பிறப்பும் ஸ்ரீமந் நாராயணனுடன் இணைந்த அவைளது வாழ்வு, மற்றும் கிளைக்கதைகளுடன் சுவைபடச் சொல்லியிருக்கிறார் கிருஷ்ண தேவராயர். இந்தக் காப்பியத்தை தமிழில் மொழிபெயர்த்து சங்ககால இலக்கியம் போன்று சுவைகூட்டி மெருகேற்றித் தந்திருக்கிறார் ஜெகத்ரட்சகன். நம்மை அக்காலத்து ஸ்ரீ வில்லிப்புத்தூருக்கும் மதுரை மாநகருக்கும் அழைத்துச் செல்கிறது இந்தக் காப்பியம். ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் செல்வச் செழிப்பும் மாட மாளிகைகளின் அழகும அக்கால மக்களின் செழிப்பான வாழ்க்கையை எண்ணி வியக்க வைக்கிறது. மதுரையை இதற்கு சிறிதும் குறைவில்லாமல் வர்ணித்திருக்கிறார் ஆசிரியர். பூக்காரியிடம் பூ வாங்க வரும் இளைஞன் சிலேடை பேச்சு, தாசரி பிரம்ம ராட்சதனிடம் பேசுவது, வெற்றியுடன் வரும் பெரியாழ்வாரை காண மக்கள் கூடுவது, அச்சமயம் நடக்கும் நிகழ்ச்சிகள், தமிழ்த் தேனில் கொஞ்சம் அதிகமாய் காதல் ரசம் சேர்ந்து இனிக்கிறது. சூடிக்கொடுத்த சடர்கொடியாளின் இந்த காப்பியம் சுவை தரும் மதுரம். நன்றி: தினமணி, 15/6/2015.