உணவு சரித்திரம்
உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு, பக். 304, விலை 225ரூ.
மிளகுக்காக தாக்குதல்களை சந்தித்த இந்தியா தமிழில் வரலாற்று நூல்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதுவும் வரலாற்றை எளிமையாகச் சொல்லும் நூல்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால், எளிமையாய் சொல்லும் கலை கைகூடுவது அத்தனை எளிதானது இல்லை. முகில் அத்தகைய எழுத்தாளர் எனது தனது மொகாலயர்கள் பற்றிய நூலிலேயே நிரூபித்தவர். உணவு சரித்திரம் என்ற பெயரே வாசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டிவிடும்தான். உணவுக்காக எத்தனையோ சரித்திரங்கள் திருத்தி எழுதப்பட்டுள்ளன என்பதை, இந்த நூல் எடுத்துக் காட்டுகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து, கம்பெனி காலங்கள் வரை வெவ்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் வரை பலவற்றிற்கு அடிப்படையாக உணவு பொருட்கள் இருந்திருக்கின்றன என, இந்த நூல் சொல்லிச் செல்லுகிறது. உதாரணமாக உப்பின் சரித்திரத்தை எடுத்துக்கொண்டால் கி.மு.வில் பண்டைய எகிப்தில், உப்பை சேகரித்த விதத்தையும், அவற்றை பயன்படுத்திய விதத்தையும் விவரித்துவிட்டு, வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு பிரதேசங்களில் உப்பின் வரலாறு, உப்பின் பயணம் என்று செல்கிறது அந்த கட்டுரை. எகிப்து, ரோம், ஐரோப்பிய நாடுகள், ஜப்பானியர்களின் நம்பிக்கை, 15ம் நூற்றாண்டில் உப்புக்காக நடந்த போர், இந்தியாவில் மவுரியர் காலத்தில் உப்பை உற்பத்தி செய்த விதம், சங்க இலக்கியத்தில் இருந்து கிடைக்கும் தகவல் என்று அடுக்கிக் கொண்டே செல்லும் தகவல்கள், உப்பை அயோடின் கலந்து கொடுக்க ஆரம்பித்த வழக்கத்திற்கான பன்னணி வரையிலும், இன்றைய உற்பத்தி முறைகள், சந்தை என, ஒரு முழுமையான பயணத்தை நமக்கு காண்பிக்கிறார். இடையே, உப்பைப் பற்றிய பழங்கதை ஒன்றையும் நமக்கு சொல்கிறார். இவ்வளவு சுவாரஸ்யமான சரித்திர ஆசிரியரைப் பாராட்டியே ஆக வேண்டும்தானே. உப்போ, பெருங்காயமோ, மிளகோ இவற்றைப் பற்றிய கட்டுரைகளில், இவற்றின் உற்பத்தி பற்றி விளக்குகையில் அறிவியல் பூர்வமாக, அறிவியல் பெயரோடும் மற்ற தகவல்களோடும் விளக்கும் ஆசிரியர், இளையராஜாவின் பாடலோடோ, கிராமியக் கதைகளோடோ, நகைச்சுவைத் துணுக்குகளோடோ அவற்றின் வரலாற்றைச் சொல்லும்போது, எங்கு தீவிரமாகவும், எங்கு லகுவாகவும் எழுத வேண்டும் என்று மிகவும் கவனமாக இருந்திருப்பது தெரிகிறது. மிளகுக்காகத்தான் நம் நாடு, உலக சரித்திரத்தில் இத்தனைத் தாக்குதல்களை சந்தித்திருக்கின்றது என்பது, பெருமூச்சு வாங்கும் விஷயம்தான். குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுவதற்கு, இதுபோன்ற நூல்கள் உகந்ததுதான் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமன்று அவர்களை வாசிப்பதற்கு பழக்கப்படுத்துவற்கு, இதுபோன்ற நூல்கள் மிகவும் உதவி புரியும் என்பதும் நிதர்சனம். -ஜீவ கரிகலான். நன்றி: தினமலர், 21/6/2015.