எங்கே போகிறோம்
எங்கே போகிறோம், அகிலன், தாகம், சென்னை 17, பக். 344, விலை 175ரூ.
கலைமகள் மாத இதழில் தொடராக வெளியாகி பதின்மூன்றாவது பதிப்பு கண்டுள்ள நாவல். நாட்டைப் பற்றிய உள்ளக் குமுறலை கதாபாத்திரங்கள் வழியே வெளிப்படுத்தி தனது கருத்துக்களைக் கூற ஒரு கருவியாக இந்த நாவலைப் பய்னபடுத்திக் கொண்டுள்ளார் ஆசிரியர். உடலை மூலதனமாக்கிப் பொருள் குவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பெண்ணே இக்கதையின் நாயகி. காசுக்காகத் தங்கள் மனசாட்சி, சொல், செயல், ஆன்மா என அனைத்தையும் விற்கும் போலிகளைத் தோலுரித்துக் காட்ட நாயகி புவனாவின் பாத்திரம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. பணக்காரர்களின் உலகில் லாபத்தைப் பெருக்கும் கருவியாகப் பெண் பயன்படுத்தப்படும் அவலமும் நாவலில் பட்டவர்த்தனமாக்கப்பட்டுள்ளது. அரசியல் அசிங்கங்களையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. பணக்காரர்களை உற்பத்தி செய்து, அவர்களிடமிருந்து பணம் வாங்கி அரசியல் நடத்தும் கேவலம் நாடெங்கும் தலை தூக்கிக் கொண்டிருக்கிறது என்று சாடியுள்ளார். கயவர்களை வழிகாட்டிகளாகக் கொள்ளும் சமுதாயம் உருப்படுமா? என்று நாவல் வழியே கேள்வியும் எழுப்பியுள்ளார். காந்தியை வழிகாட்டியாகக் கொண்டு சுதந்திரம் பெற்ற நாட்டுக்கு இருபத்தைந்தாண்டு காலத்துக்குள் இந்த நிலை ஏற்படலாமா? என்ற ஆசிரியரின் அன்றைய ஆவேசத்தில் பிறந்ததே இந்த நாவல். நாடு சுதந்திரம் அடைந்து இப்போது 67 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் நிலைமை மேலும் மோசமடைந்ததுதான் உண்மை. இந்த நாவலுக்கான தேவை இப்போதும் இருக்கிறது. நன்றி: தினமணி, 13/1/2014.