குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007
குமுதம் ஒரு பக்கக் கதைகள் 2007, குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 112, விலை 80ரூ.
எழுத்துலகில் மிகப்பெரிய மைல்கல் குமுதம் ஒரு பக்கக் கதைகள். நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் பிரச்னைகள், போராட்டங்கள், அன்பு, காதல், பகை, போட்டி, பொறாமை இவைதான் இந்த ஒரு பக்கக் கதைகளின் கருவாக அமைந்துள்ளன. பிரச்னைகளை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வையும் இந்த சின்னஞ்சிறு கதைகளிலேயே அதன் ஆசிரியர்கள் வைத்திருப்பது வியப்பு. இவர்கள் தொடாத பொருளே இல்லை என்கிற அளவிற்கு சிகரம் தொட்டுள்ளனர். ஒவ்வொரு கதைக்கும் நடை, உத்தி, உள்ளடக்கம் வேறுபட்டு நிற்பது, படைப்பாளிகளின் தனித்திறன். மொத்தத்தில் குமுதம் ஒரு பக்கக் கதைகளைப் படித்து முடித்த எவரும் ஒரு எழுத்தாளராக மலர்வது உறுதி.
—-
உயிருக்கு நேர், தொகுப்பாசிரியர்-முனைவர் ம. நடராசன், தமிழ் அரசி பதிப்பகம், 189, டி.டி.கே. சாலை, ஆர்வார்பேட்டை, சென்னை 16, பக். 528, விலை 300ரூ.
தமிழர் வரலாற்றில் மொழியைக் காக்க நடந்த போராட்டம்தான் எழுச்சிமிக்கது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது. 1930களுக்குப் பிறகு இந்திமொழி ஆதிக்கத்திற்கு எதிராக தமிழர்கள் கிளர்ந்தெழுந்தது. 1940களில் அது வலுப்பெற்று, தமிழகம் முழுதும் பற்றிக் கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், துப்பாக்கிச் சூடுகள், உயிர்ப்பலிகள், ஆட்சியாளர்களின் அடக்குமுறைகள் என்று ஒன்றுவிடாமல் தொகுத்து பதிவாக்கியுள்ளார். மொழியைக் காக்க நடந்த போராட்டங்களில் உயிர் நீத்த அத்தனை மொழிப்போராளிகளும் நினைவு கூறப்பட்டுள்ளனர். மொழிக்காக தங்கள் கைக்குழந்தைகளுடன் சிறை சென்ற பெண்கள், 1965ல் மாணவர்கள் போராட்டம், அதில் உயிர்நீத்த மாணவர்களின் மொழிப்பற்று அலசப்பட்டுள்ளன. மொழிப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் தமிழறிஞர்களின் நேர்காணல்கள், போராட்டம் தொடர்பான நூல்கள் மற்றும் பத்திரிக்கைச் செய்திகளை ஒருசேர அறிந்துகொள்ள இந்நூல் உதவும். அடுத்த தலைமுறையினரும் தமிழ்மொழிப் போராட்டத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நூலாசிரியரின் நோக்கம் நூலில் நிறைவேறியுள்ளது. மொழிப்போர் பற்றிய ஆய்வுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவணம் இந்நூல். நன்றி: குமுதம், 15/1/2014