மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும்
மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும், அம்ஷன் குமார், சொல் ஏர் பதிப்பகம், 30ஜி, கல்கி நகர், கொட்டிவாக்கம், சென்னை 41.
சினிமா விமர்சகர், கட்டுரை எழுத்தாளர், இயக்குனர் எனப் பல அடையாளங்கள் கொண்ட அம்ஷன் குமாருக்குப் பதிப்பாளர் என்ற இன்னொரு அடையாளமும் உண்டு. இந்தாண்டு சினிமா தொடர்பான மாற்றுப் படங்களும் மாற்றுச் சிந்தனைகளும் என்னும் தன் புத்தகத்தைத் தனது சொல் ஏர் பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்துள்ளார். புத்தகம் பதிப்பதையும் நான் ஒரு சினிமா நுட்பத்தைப் போலவே பார்க்கிறேன். சினிமாவின் தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுபோல இதில் உள்ள சின்னச் சின்ன தயாரிப்பு விஷயங்களையும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறது. நானே புத்தகங்கள் வெளியிட இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார் அம்ஷன் குமார். அம்ஷன் குமார் சினிமா குறித்துத் தொடர்ந்து எழுதிவருகிறார். இவரது ஒருத்தி என்னும் படம் பல உலகப் பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டப்பட்டுள்ளது. பாரதியார் குறித்து இவர் எடுத்த ஆவணப்படம், பாரதி தொடர்பான ஆய்வுகளுக்கு இன்றுவரை முன்னுதாரணமாக இருந்துவருகிறது. சினிமா தவிர்த்து அம்ஷன் சிறந்த கட்டுரையாளராகவும் அறியப்பட்டவர். அசோகமித்திரன் போன்ற முன்னோடி எழுத்தாளர்கள் குறித்தும் கட்டுரை எழுதியுள்ளார். அம்ஷன் குமார் இதுவரை ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். சினிமா நுட்பங்கள் குறித்தும், சினிமா வரலாறு குறித்தும் பலரும் புத்தகங்கள் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் அம்ஷன் குமார் ஒரு சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி ரசிக்க வேண்டும் என்று சாமானிய ரசிகனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் சினிமா ரசனை என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைத் தொகுப்பைக் கொண்டு வந்தார். இதன் முதல் தொகுதி காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்து பெரும் கவனம் பெற்றது. சினிமா ரசனை நூலின் முழுத்தொகுப்பை இரண்டாவது தொகுதியாக சென்ற ஆண்டின் தனது சொல் ஏர் பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்தார். நல்ல சினிமா உருவாக முதலில் நம்முடைய சினிமா ரசனை மேம்பட வேண்டும். இதுவே தன் எழுத்தின் ஆதாரம் என்கிறார் அம்ஷன் குமார். அம்ஷன் குமாரின் புத்தகங்களை இதுவரை காலச்சுவடு, அன்னம் போன்ற தமிழின் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. அம்ஷன் குமாரின் புத்தகங்களை வெளியிட இன்றும் பல பதிப்பகங்கள் தயாராக உள்ளன. இந்நிலையில் அவரே வெளியிடக் காரணம் என்ன என்று கேட்டபோது, மற்ற பதிப்பகங்கள் என் புத்தகத்தை வெளியிட்டதில் எந்தவிதமான மனஸ்தாபமும் இல்லை. ஆனால் என்னுடைய புத்தகங்களை நானே வெளியிடும்போது பிரதிகள் எப்போதும் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். கடைகளுக்கு உடனே கொடுக்க முடியும். நண்பர்களுக்கும் கொடுக்க முடியும். என்னுடைய புத்தகங்கள் பலபேரிடம் போய்ச் சேர வேண்டும் என்பதே என் விருப்பம் என்கிறார் அம்ஷன் குமார். இன்றைக்குள்ள இளம் இயக்குனர்கள் பலரும் என்னைச் சந்திக்கும்போது என்னுடைய கட்டுரைகள் தங்களுக்குச் சில விஷயங்களைச் சொல்லித் தந்தன என்கிறார்கள். இது எனக்கு நிறைவாக இருக்கிறது என்கிறார் அம்ஷன் குமார். -ஆர். ஜெயக்குமார். நன்றி: தி இந்து, 31/1/2014.