வெற்றி வெளியே இல்லை
வெற்றி வெளியே இல்லை, வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், சென்னை, பக். 224, விலை 100ரூ.
நூலின் தலைப்பே நம்மைப் படிக்கத் தூண்டுகிறது எனலாம். நாடறிந்த வழக்கறிஞர் நூலின் ஆசிரியர். சிறந்த பேச்சாளரான நூலாசிரியர், ஏற்கனவே பல சுயசிந்தனை நூல்களை எழுதியுள்ளார். இந்நூலும் நம் சிந்தனையைத் தூண்டி, நல்லறிவு பெறவைக்கிறது. 50 தலைப்புகளில் நூலாசிரியர் தம் எண்ணச் சிறகுகளை விரித்துள்ளார். அத்தனையும் படிப்போர்க்கு, இனிக்கும் என்றே கூறலாம். திருக்குறள், கம்பராமாயணம், திரிகடுகம், பழமொழி நானூறு என, பல நூல்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி, நூலாசிரியர் விளக்குவது அவரின் விரிந்த அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாகும். சில கட்டுரைகளில், உண்மை நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன. படிப்போர்க்கு, ஆர்வத்தை ஊட்டும் சில கட்டுரைகளில் தென்படும் நகைச்சுவைகள், வாசகர்களைச் சிந்திக்க வைக்கும். -டாக்டர் கலியன்சம்பத்து.
—-
ஒன்றே உலகம், தனிநாயக அடிகள், தமிழ்ப் பேராயம், பக். 264, விலை 170ரூ.
உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தக் காரணமாக அமைந்த பெருமை, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட சேவியர் தனிநாயக அடிகளாருக்கே உரியது. மலேசியப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றியவர் அடிகளார். இந்தியாவிலும், பிறநாடுகளிலும் பல்கலைக் கழகங்களில் பணிபுரியும் தமிழ்ப் பேராசிரியர்களை ஒன்றுகூட்டி, ஆண்டுதோறும் உலக அளவில், தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கம் நடத்த வித்திட்டவர், வினையாற்றியவர். ஐரோப்பிய மொழிகள் பலவும் கற்றுத் தேர்ந்த, பன்மொழிப் புலவர் இவர். அமெரிக்கா, ஜப்பான், சோவியத் நாடுகள், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், ஆப்பிரிக்கா, நடு கிழக்கு நாடுகள் என்று, 35 நாடுகளுக்கு சுற்றுச் செலவு மேற்கொண்டு, தாம் உணர்ந்த, அறிந்த செய்திகளை, ஒன்றே உலகம் என்னும் இந்நூலில் நமக்களித்துள்ளார். சுற்றுச் செலவு (பயணம்) என்பது, ஒரு கலை. அந்தக் கலையின் நுட்பமுணர்ந்து, நமக்கும் உணர்த்தியுள்ளார் அடிகளார். அவர் சென்று கண்ட நாடுகளில், மக்கள் வாழ்க்கை முறை, தொழில்கள், வாணிபம், கலைகள், பொழுதுபோக்குகள் பண்பாட்டு நிலைகள் அனைத்தையும், ஊடுருவிக் கண்டு விளக்கியுள்ளார். எத்தனை வேறுபாடுகள் இருப்பினும், உலகம் முழுவதும், மனிதன், மக்கள், சமூகம் என்பது ஒன்றுதான். அதை உள்ளடக்கி, ஒன்றே உலகம் எனும் தலைப்பும் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும், தமிழ் பெற்றுள்ள சிறப்பும், இடமும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. படித்துப் பயன்பெறத்தக்க நல்ல நூல். -கவிக்கோ ஞானச்செல்வன். நன்றி: தினமலர், 2/2/2014.