நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு
நவீன வாழ்க்கையில் பிள்ளைகள் வளர்ப்பு, Dr.C.S. ராஜு, டி.வி. சிவக்குமார், மணிமேகலைப் பிரசுரம், த.பெ.எண். 1447, 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 192, விலை 100ரூ.
கூட்டுக்குடும்பங்கள் இருந்த காலத்தில் எளிதாக இருந்த பிள்ளைகள் வளர்ப்பு, தனிக்குடுத்தனங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில் கஷ்டமாகிவிட்டது. தவிர, பிள்ளைகளை ஒழுக்கமானவர்களாகவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும், ஆராக்கியமானவர்களாகவும்கூட வளர்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது. குறிப்பாக, இன்றைய பெற்றோர்களுக்கு சம்பாதிப்பதிலும் மற்ற பிரச்னைகளை சமாளிப்பதிலும் இருக்கும் ஞானம், பிள்ளைகள் வளர்ப்பு விஷயத்தில் போதிய அளவு இல்லை. விளைவு, பிள்ளைகளின் மனநிலையும், உடல்நிலையும், பலவாறு பாதிக்கப்படுகின்றன. இவற்றைச் சரிப்படுத்த ஆலோசகர்களை அணுகுகிறார்கள். ஆனால், உண்மையில் பெற்றோர்க்குத்தான் ஆலோசனைத் தேவைப்படுகிறது. அந்த வகையில் இப்புத்தகம், குழந்தை முதல் வாலிப வயதுவரை தங்கள் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க, பெற்றோர்களுக்கு அருமையான உத்திகளைக் கூறுகிறது. இப்பத்தகத்தின் முதல் பாகத்திலுள்ள 43 கட்டுரைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை விலாவாரியாகக் கூறுகின்றன. இரண்டாவது பாகத்தில் உள்ள 10 கட்டுரைகள், படிப்பினைக்காக உண்மைச் சம்பவங்களைக் கூறி, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வைத் தோற்றுவிக்கின்றன. இப்புத்தகம் நவீன வாழ்க்கை முறையில் உள்ள பெற்றோர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பலாம். -பரக்கத். நன்றி: துக்ளக், 15/1/2014.
—-
நல்வழி காட்டும் ஸ்ரீமத் பகவத்கீதை, அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை, பக். 240, விலை ரூ.150.
ஆதிசங்கரர் உள்பட பலர் பகவத்கீதைக்கு பல உரைகளை அந்தந்தக் கால கட்டங்களில் எழுதியுள்ளார். ஆனால் தற்கால நடைமுறைக்கு ஏற்ப எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக, மிகத் தெளிவாக பகவத்கீதைக்கு உரை எழுதியுள்ளார் நூலாசிரியர். பாரதப்போரின்போது அரண்மனையில் அமர்ந்தபடி திருதராஷ்டிரனுக்கு சஞ்ஜயன் நேர்முக வர்ணனை சொல்வதுபோல் வரும். அப்படி நடக்கவில்லை என்பதைக் கூறியதோடு எப்படி நடந்தது, எப்படி எடுத்துரைக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு விளக்கங்கள் நூலில் இடம்பெற்றுள்ளது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 29/1/2014.